Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

ADDED : செப் 13, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; 'மக்களை காப்போம்... தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணமாக, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, நேற்று திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகளில் பிரசாரம் செய்தார். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஆனந்தன், எம்.எல்.ஏ., விஜயகுமார், அமைப்பு செயலாளர் சிவசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, பழனிசாமி பேசியதாவது:

சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார். இன்றுதான், நானும் பிரசாரம் செய்கிறேன். இதுதான், இயற்கையான கூட்டணி. இளைஞர்கள் வாழ்க்கை சூனியமாக்கும் போதை பழக்கத்தை அரசு கண்டுகொள்ளவில்லை; போதை கலாச்சாரம் வளர்ந்ததே தி.மு.க, ஆட்சியின் நான்காண்டு சாதனை.

வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம், குடிநீர் கட்டணம், குப்பை வரி உயர்வு, மின்கட்டணம், 67 சதவீதம் உயர்வு என, பல்வேறு வரிச்சுமையை, மக்களின் தலையில் இறக்கிவிட்டனர். தி.மு.க., ஆட்சியில், ஒரு அமைச்சருக்கு வேண்டிய நிறுவனத்திடம், 'செட்டாப் பாக்ஸ்' வாடகைக்கு வாங்குகின்றனர். மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. இதனால், அரசுக்கு, 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை மக்களுக்கு வழங்கப்படும்.மக்களை ஏமாற்றும் முதன்மையான முதல்வராக, ஸ்டாலின் இருக்கிறார்.

இவ்வாறு, பழனிசாமி பேசினார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் பழனிசாமி பேசியதாவது:

அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியை பார்த்து, ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. திருப்பூர் மாநகராட்சியில், கடந்த 40 நாட்களாக முறையாக குப்பை அள்ளப்படவில்லை. வீதிதோறும் குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்க வரி விதிப்பால், திருப்பூர் பின்னலாடை தொழில் பல பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி, 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது; தொழிலாளர் வேலை இழந்துள்ளனர். தொழில் துறையினரின் பிரச்னைகளை கேட்டறிந்து, பிரதமரை சந்தித்து பேசி, தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள எம்.பி.,க்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

எப்போதுமே மக்களை பற்றி சிந்திக்கிற அரசு, அ.தி.மு.க., தலைமையிலான அரசு; எப்போதுமே, வீட்டு மக்களை பற்றி சிந்திக்கின்ற அரசு, தி.மு.க., அரசு. இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us