பவன் கல்யாண் மீது பாய்கிறது தி.மு.க.,
பவன் கல்யாண் மீது பாய்கிறது தி.மு.க.,
பவன் கல்யாண் மீது பாய்கிறது தி.மு.க.,
ADDED : மார் 15, 2025 01:54 PM

சென்னை: ''ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தமிழக அரசியலைப் பற்றி தெரியாது,'' என தி.மு.க.,வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தி.மு.க., எம்.பி., கனிமொழியும், பவன் கல்யாணை குறை கூறி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க., குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு, மூன்றாவது மொழியாக, விரும்பும் மொழியை தேர்வு செய்யலாம் என விளக்கமளித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜனசேனா கட்சியின் 12ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், '' நம் நாட்டில் பல மொழிகள் இருப்பது நல்லது. தமிழக அரசியல்வாதிகள் ஏன் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால், தமிழ் படங்களை ஹிந்தியில் 'டப்' செய்து வெளியிட அனுமதிக்கின்றனர். சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கின்றனர் என்றே என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், ஹிந்தி தேவையில்லையா? எனக்கூறியிருந்தார். இவரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
அவரை குறை கூறும் வகையில், தி.மு.க., எம்.பி., கனிமொழி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். பா.ஜ.,வுக்கு முன், பா.ஜ.,வுக்கு பின் என்று வெவ்வேறு காலகட்டங்களில் ஹிந்திக்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் பவன் கல்யாண் வெளியிட்ட பதிவுகளை கனிமொழி பகிர்ந்துள்ளார்.
தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினரும், பவன் கல்யாணுக்கு எதிராக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
பவன் கல்யாணின் பேச்சு தொடர்பாக தி.மு.க., செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்., இளங்கோவன் கூறியதாவது: 1938ம் ஆண்டு முதல் ஹிந்தியை எதிர்த்து வருகிறோம். இரு மொழிக் கொள்கையை தான் பின்பற்றுவோம் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதற்கு கல்வியில் சிறந்து விளங்கும் நிபுணர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளே காரணம்; நடிகர்கள் அல்ல.1968களில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, பவன் கல்யாண் பிறந்திருக்க மாட்டார். தமிழக அரசியலைப் பற்றி அவருக்கு தெரியாது. ஹிந்தியை நாங்கள் எதிர்ப்பது இது முதல் முறை அல்ல. தாய்மொழியில் கல்வி அளிப்பதே சிறந்தது என கருதுவதால், நாங்கள் ஹிந்தியை எதிர்க்கிறோம். பா.ஜ.,விற்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளித்தால், அதன் மூலம் பா.ஜ., அரசிடம் இருந்து ஏதாவது பலன் கிடைக்கும் என அவர் நினைக்கிறார். இவ்வாறு டி.கே.எஸ்., இளங்கோவன் கூறினார்.