ADDED : செப் 01, 2025 06:19 AM
சென்னை : ''உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன், தமிழ் புலமை உள்ளவர்; அவர் தமிழில் எழுதுவார் என்று நம்புகிறேன்'' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் நடத்திய, 'சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு' 2024ம் ஆண்டுக்கான போட்டியில் எழுத்தாளர் ஆத்மார்த்தி எழுதிய, இரண்டு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற, 'தேவதாஸ்' நாவல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. நாவலின் முதல் பிரதியை, உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் வெளியிட, கவிஞர் வைரமுத்து, பேராசிரியை பர்வீன் சுல்தானா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் ப.சிதம்பரம் பேசுகையில், ''நீதிபதி மகாதேவன் தமிழ் புலமை உள்ளவர். அவர் தமிழ் படைப்புகளை எழுதுவதற்கு காலம் இருக்கிறது.
இப்போது தீர்ப்புகளை எழுதுகிறார். தீர்ப்புகளை எழுதி முடித்த பின், தமிழில் எழுதுவார் என, நம்புகிறேன். எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது எழுத்து என்ற அமைப்பின் நோக்கம். எழுத்தாளர்கள் எங்களுக்கு படைப்புக்களை தர முன் வர வேண்டும். சிறந்த படைப்பை நடுவர் குழு தேர்ந்தெடுத்து, நாங்கள் கவுரப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,'' என்றார்.