தென்பெண்ணையாற்று நீர் தர மறுப்பு ; தமிழகம் மீது வழக்கு தொடர முடிவு
தென்பெண்ணையாற்று நீர் தர மறுப்பு ; தமிழகம் மீது வழக்கு தொடர முடிவு
தென்பெண்ணையாற்று நீர் தர மறுப்பு ; தமிழகம் மீது வழக்கு தொடர முடிவு
ADDED : மார் 25, 2025 05:05 AM

ஒப்பந்தப்படி, தென்பெண்ணையாற்று நீரை, புதுச்சேரிக்கு தர மறுத்துள்ள தமிழக அரசு மீது வழக்கு தொடர, புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
தென்பெண்ணையாற்றின் தண்ணீர் பங்கீட்டிற்காக, 1910 ஜூன் 15ம் தேதி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்காக பிரெஞ்சு அரசும், ஆங்கிலேய அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டன. பின், இந்த ஒப்பந்தம், 2007ல் புதுச்சேரி - தமிழக அரசு இடையே புதுப்பிக்கப்பட்டது.
இந்த தண்ணீரை நம்பி, புதுச்சேரியில், 4,776 ஏக்கர் நிலமும், தமிழகத்தில் 1275.11 ஏக்கர் நிலமும் உள்ளன. இந்த ஒப்பந்தப்படி, தமிழக அரசு புதுச்சேரிக்கு ஆண்டுதோறும் 44.67 டி.எம்.சி., நீர் திறந்து விட வேண்டும்.
ஒப்பந்தப்படி சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து, ஒன்பது மாதத்திற்கு புதுச்சேரி ஆயக்கட்டு பகுதிகள் தண்ணீர் பெற வேண்டும். ஆனால், புதுச்சேரி பகுதிக்கு 2 மாதம் வரை தான் தண்ணீர் கிடைக்கின்றது. அதுவும் பருவமழை பெய்யும் நவம்பர், டிசம்பரில் தான், பங்காரு வாய்க்கால் வழியாக சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் பெறுகிறது.
தற்போது, குடிநீர் தேவைக்காக புதுச்சேரி அரசு தண்ணீர் கேட்ட போது, தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, நேற்று புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ., - எம்.எல்.ஏ., அசோக்பாபு கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ''ஒப்பந்தப்படி நீரை தராததால், மத்திய நீர் வளத்துறைக்கு தமிழக அரசு மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மத்திய நீர் ஆணையம் தமிழக அரசுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. விரைவில், தமிழக அரசு மீது சட்ட நடவடிக்கை எடுத்து, புதுச்சேரிக்கு உரிய நீரை பெறுவோம்,'' என்றார்.