தேனி சி.ஆர்.பி.எப்., எஸ்.ஐ., மணிப்பூரில் மரணம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்
தேனி சி.ஆர்.பி.எப்., எஸ்.ஐ., மணிப்பூரில் மரணம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்
தேனி சி.ஆர்.பி.எப்., எஸ்.ஐ., மணிப்பூரில் மரணம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்
ADDED : ஜன 29, 2024 12:15 AM

தேவதானப்பட்டி : மணிப்பூரில் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) எஸ்.ஐ., நாகராஜன் 52, மாரடைப்பால் இறந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். சி.ஆர்.பி.எப். எஸ்.ஐ.,யாக மணிப்பூரில் பணி புரிந்தார். மனைவி ராமலட்சுமி, மகன்கள் திவாகர், ரோஹித் உள்ளனர்.
ஜன.26 இரவு 7:00 மணிக்கு பணியின்போது மாரடைப்பால் நாகராஜன் இறந்தார்.
இவரது உடல் நேற்று ராணுவ விமானம் மூலம் மதுரைக்கு காலை 7:50 மணிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து சி.ஆர்.பி.எப். வாகனத்தில் ஜெயமங்கலத்திற்கு காலை 10:15 மணிக்கு வந்தது. நான்கு ரோடு பகுதியில் உடல் வைக்கப்பட்டது.
ஜெயமங்கலம் முன்னாள் ராணுவத்தினர் சங்கம், பொதுமக்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சி.ஆர்.பி.எப்., ஏ.டி.எஸ்.பி., ரமேஷ் தலைமையில் வீரர்களும், பெரியகுளம் டி.எஸ்.பி., ஞானரவி, போலீசார் மரியாதை செலுத்தினர். பின்னர் உடல் வாகனத்தில் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நாகராஜன் உடலில் மேல் போர்த்தப்பட்டு இருந்த தேசியக்கொடியை மனைவி ராமலட்சுமியிடம் ஏ.டி.எஸ்.பி., ரமேஷ் வழங்கினார்.
அதன்பின் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நாகராஜன் உடல் காலை 11:30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.-