Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சர்ச்சைக்குரிய பெருமாள் பாடல் வரிகள் நீக்கம்: படத்தை வெளியிட தடை இல்லை

சர்ச்சைக்குரிய பெருமாள் பாடல் வரிகள் நீக்கம்: படத்தை வெளியிட தடை இல்லை

சர்ச்சைக்குரிய பெருமாள் பாடல் வரிகள் நீக்கம்: படத்தை வெளியிட தடை இல்லை

சர்ச்சைக்குரிய பெருமாள் பாடல் வரிகள் நீக்கம்: படத்தை வெளியிட தடை இல்லை

ADDED : மே 16, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
சென்னை: நடிகர் சந்தானம் நடித்து, இன்று வெளியாகவுள்ள, 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில், 'கோவிந்தா கோவிந்தா' என்ற பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகள் நீக்கப்பட்டதால், படத்தை வெளியிட ஐகோர்ட் தடை விதிக்கவில்லை.

பிரேம் ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சந்தானம், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' என்ற படம், இன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை, நடிகர் ஆர்யாவின், 'தி ஷோ பீப்பிள்' என்ற நிறுவனமும், நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில், 'கோவிந்தா கோவிந்தா' என்ற பாடலில், திருப்பதி வெங்கடாஜலபதியை இழிவுப்படுத்தும் வகையில் வரிகள் உள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

'ஸ்ரீனிவாசா கோவிந்தா... ஸ்ரீ வெங்கடேஷா கோவிந்தா' என்ற பக்தி பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தம் இல்லாத கடவுள் பெருமாளை இழிவுப்படுத்தும் விதமாக பாடல் மற்றும் இசையை அமைத்துள்ளனர்.

மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பாடலில் வரிகள் உள்ளன. எனவே, இந்த பாடலுடன் படத்தை, இன்று வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ''ஆட்சேபத்துக்கு உரிய பாடல் வரிகள், ஏற்கனவே நீக்கப்பட்டு உள்ளன. ''பாடல் மாற்றி அமைக்கப்பட்டு, புதிதாக தணிக்கை சான்று பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

மனுதாரர் தரப்பில், பாடல் டியூன் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்றும், சமூக வலைதளங்களில் பாடல் உள்ளது என்றும் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், 'இதுபோல டியூன் பயன்படுத்த வேண்டும் என எவ்வாறு தோன்றியது? மற்ற மதங்களை பற்றி, இப்படி பாடலில் பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதத்துக்கும் அவதுாறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது' என்று கூறி, பாடலில் இடம்பெறும் கோவிந்தா, கோவிந்தா எனும் 'டியூனை மியூட்' செய்வது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி, பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தினர்.

அதன்படி, அந்த பாடலில் வரும், இந்த டியூனை கேட்க முடியாதபடி, 'மியூட்' செய்யப்பட்டு விட்டதாக,படத்தயாரிப்பு நிறுவனம்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், 'இவ்வழக்கில் இன்று விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று கூறி, படத்தை திரையிட அனுமதித்தனர்.

பவன் எதிர்ப்புக்கு

பணிந்தார் சந்தானம்'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்று பாடலுக்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர், சந்தானம் படக்குழுவினர் மீது, திருப்பதி திருமலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 'சர்ச்சை பாடலை நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், திருப்பதி வரும் தமிழக பக்தர்களை தடுத்து நிறுத்துவோம்' என்றும், ஜனசேனா கட்சி திருப்பதி நிர்வாகி கிரண்ராயர் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரே, சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us