வீடுகளுக்கு ரேஷன் வினியோகம்; தி.மு.க.,வினர் குறுக்கிடுவதாக புகார்
வீடுகளுக்கு ரேஷன் வினியோகம்; தி.மு.க.,வினர் குறுக்கிடுவதாக புகார்
வீடுகளுக்கு ரேஷன் வினியோகம்; தி.மு.க.,வினர் குறுக்கிடுவதாக புகார்

சென்னை:முதியவர்களின் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டத்தில், தி.மு.க.,வினர் குறுக்கீடு செய்வதாக, ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றத்திறனாளி வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, கடந்த மாதம், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை துவக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுதும், 21.70 லட்சம் பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந் தோறும் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் வாகனங்களில் உணவு பொருட்களை எடுத்துச் சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்கின்றனர்.
இவ்வாறு வினியோகம் செய்யும் போது, தி.மு.க.,வினர் குறுக்கீடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:
வாகனத்தில் பொருட்களை எடுத்துச் சென்று தெருவில் நிறுத்தியதும், அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க.,வினர் வந்து, 'வட்ட செயலர் வந்ததும் கொடுக்கலாம்' என்கின்றனர். அவர் வந்து, 'எந்தெந்த கார்டுதாரர்களின் வீட்டிற்கு பொருட்கள் வழங்க போறீங்க; அந்த பட்டியலை காட்டவும்' என்கின்றனர்.
அதை, தங்களின் மொபைல் போனில் போட்டோ எடுத்து விட்டு, 'இவர் இந்த தெருவுக்கு உட்பட்ட கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகி, நீங்கள் பொருட்கள் எடுத்துச் செல்லும் போது, இவரை உடன் அழைத்து செல்ல வேண்டும்' என்று கூறி, ஒருவரை அனுப்புகிறார். அவர் எங்களை சுதந்திரமாக பணி செய்ய விடுவதில்லை.
இதுகுறித்து, கூட்டுறவு இணை பதிவாளர்களிடம் புகார் அளித்தும் பயனில்லை. எனவே, வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில், கட்சியினரின் குறுக்கீட்டை, முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.