அடிக்கடி குழந்தைகளோடு தமிழகம் வாருங்கள் அயலக தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
அடிக்கடி குழந்தைகளோடு தமிழகம் வாருங்கள் அயலக தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
அடிக்கடி குழந்தைகளோடு தமிழகம் வாருங்கள் அயலக தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
ADDED : ஜன 12, 2024 10:33 PM

சென்னை:''எங்கு வாழ்ந்தாலும் தாய்த் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி குழந்தைகளோடு தமிழகம் வாருங்கள்,'' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த, 'அயலகத் தமிழர் தினம் - 2024' நிறைவு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட, 'அயலகத் தமிழர் நல வாரியம்' அமைக்கப்பட்டுள்ளது.
தனிப் பிரிவு
துறையும்; வாரியமும் சிறப்பாக செயல்படுகிறது. அயல்நாடுகளில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய துாதரகத்துடன் இணைந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை, இத்துறை சிறப்பாக செய்து வருகிறது.
அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்கள், எதிர்கொள்ளும் பிரச்னைகளை களைய, டி.ஜி.பி., அலுவலகத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
அயல்நாட்டு தமிழர்கள், அங்கு பிரச்னைகளை சந்திக்கும்போது, தமிழக அரசு விரைவாக செயல்பட்டு, அவர்களை பத்திரமாக அழைத்து வருகிறது.
வெளிநாடு வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர், தங்கள் சேமிப்பை, தமிழகத்தில் முதலீடு செய்கின்றனர். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, அவர்கள் அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய, ஏதுவான சூழலை உருவாக்கப்பட்டுள்ளது.
நீராலும், நிலத்தாலும், பிரிந்து இருந்தாலும், நாம் எல்லாரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்.
எங்கு வாழ்ந்தாலும்
தமிழ் அன்னையின் குழந்தைகள். எங்கு வாழ்ந்தாலும் தமிழகத்தை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழகத்திற்கு வாருங்கள். இங்கிருக்கும் கீழடி, பொருணை, ஆதிச்சநல்லுாரை காட்டுங்கள்.
தமிழோடு இணைந்திருங்கள். எங்கு வாழ்ந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், திராவிட மாடல் அரசுக்கும் உறுதுணையாக இருந்திடுங்கள்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
'வேர்களை தேடி' திட்டத்தின் கீழ், ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 57 அயலகத் தமிழ் மாணவர்கள், நிகழ்ச்சியின் போது தங்களின் பண்பாட்டு சுற்றுலா அனுபவங்களை பகிர்ந்தனர்.
அயலகத் தமிழர் தின விழாவில், 'எனது கிராமம்' என்ற திட்டத்தையும், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும், அயலகத் தமிழர்கள், அதற்குரிய நிதியை அளித்து, இத்திட்டத்தின் வழியாக செயல்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.
விழாவில், சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் சண்முகம், தமிழக அமைச்சர் மஸ்தான், மலேஷியா நாட்டின் சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை துணை அமைச்சர் குணசேகரன்உள்ளிட்ட அயல்நாட்டு பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.