Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஜாதிப்பெயர்களின் இறுதி எழுத்தில் மாற்றம்: பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் தகவல்

ஜாதிப்பெயர்களின் இறுதி எழுத்தில் மாற்றம்: பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் தகவல்

ஜாதிப்பெயர்களின் இறுதி எழுத்தில் மாற்றம்: பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் தகவல்

ஜாதிப்பெயர்களின் இறுதி எழுத்தில் மாற்றம்: பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் தகவல்

Latest Tamil News
செங்கல்பட்டு: ஜாதிப் பெயர்களின் இறுதி எழுத்து 'ர்' என்று முடியும் வகையில் மாற்றம் செய்து, மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்ய பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது; சுயமரியாதை திருமணத்தை அண்ணாதுரை சட்டமாக்கினார். கருணாநிதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் அங்கீகாரம் வழங்கினார். அதன் நீட்சியாகத்தான் சமூகநீதிக்கான இடஒதுக்கீடு, மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

இன்று தமிழ் சமூகம் சிந்தனை ரீதியாக முன்னோக்கி செல்ல திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. ஜாதிப் பெயரில் இருந்த விடுதிகளை சமூக நீதி விடுதிகளாக மாற்றியுள்ளோம். ஜாதிப் பெயர்களின் இறுதி எழுத்து 'ர்' என்று முடியும் வகையில் மாற்றம் செய்து, மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்ய பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வேற்றுமை, பகைமையையும் விரட்ட சமூக நீதி, சமத்துவம், கல்வி, அதிகார உரிமை ஆகியவை வேண்டும். அதனை உருவாக்க பாடுபடுகிறேன்.

பவள விழா, நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கு எதுவும் மாறவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள். இது அக்கறை இல்லை, ஆணவம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உங்களால் உடைக்க முடியவில்லை என்ற சவால். இந்த 100 ஆண்டுகளில் மாற்றத்திற்கான விதைகளை நாம் விதைத்துள்ளோம். இங்கு எதுவுமே மாறக் கூடாது என்று நினைப்பவர்கள் சதித்திட்டம் போடுவதை நாட்டில் நடக்கும் செய்திகளை உற்று பாருங்கள். தமிழகம் ஏன் தனித்து உயர்ந்து நிற்கிறது என்று புரியும்.

சிலர் திமுகவை பிடிக்காது என்பார்கள். அது ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பது பிடிக்காது என்று தான் பொருள். எல்லோரும் கோவிலுக்குள் செல்வது பிடிக்காது. தமிழ் பிடிக்காது, தமிழர்கள் பிடிக்காது. நாம் தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது. நம் மக்களுக்கு கிடைத்திருப்பதை வேகவேகமாக பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அறிவியலை பின்னுக்கு தள்ளி பிற்போக்குதனத்தையும், ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த சூழ்ச்சி நடக்கிறது. தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கித் தள்ள நுணுக்கமான சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை எல்லாம் தடுத்து நிறுத்துவது தான் இந்த திராவிட மாடல்.

அடுத்து திராவிட மாடல் 2.O என்று சொல்வோம். 2026ல் நடப்பது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னை காத்துக் கொள்ளக் கூடிய சமுதாய தேர்தல். கொள்கையற்ற அதிமுகவால் 10 ஆண்டுகள் பாழாய் போன தமிழகத்தை, மக்களின் ஆதரவோடு மீட்டெடுத்து, இந்த 4 ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம்.

திராவிடத்திற்கு எதிரான பாஜவும், திராவிடம் என்றாலே என்னவென்று தெரியாத இபிஎஸ்ஸின் அதிமுகவும் மீண்டும் கபளிகரம் செய்ய பார்க்கிறார்கள். தமிழகத்தை நாசப்படுத்தும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us