மாம்பழ விவசாயிகளுக்கு உதவக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மாம்பழ விவசாயிகளுக்கு உதவக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மாம்பழ விவசாயிகளுக்கு உதவக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : ஜூன் 24, 2025 11:05 PM
சென்னை:'தமிழகத்தில் மாம்பழம் விலை வீழ்ச்சியை ஈடுசெய்ய, சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்தி, விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்க வேண்டும்' என, பிரதமர் மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மாம்பழ ரகங்களில், பெங்களூரா 80; அல்போன்சா ரகம் 50 சதவீதம், மாம்பழக்கூழ் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு அபரிமிதமான அளவில், மாம்பழம் உற்பத்தியாகி உள்ளது. முந்தைய ஆண்டு கையிருப்பு அதிகம் இருப்பதால், பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் தேவை கணிசமாக குறைந்துள்ளது.
வித்தியாசம்
இது, பெங்களூரா வகைக்கு, ஒரு டன்னுக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை, குறைந்த விலைக்கு வழிவகுத்தது.
மாம்பழ விவசாயிகளின் துயரத்தை போக்க, நடைமுறையில் உள்ள விற்பனை விலைக்கும், சந்தை விலைக்கும் உள்ள வேறுபாட்டை, மத்திய - மாநில அரசுகள் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும், சந்தை தலையீட்டு திட்டத்தின் கீழ், விலை வித்தியாச தொகையை செலுத்தும் வழிமுறையை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 1 டன் மாம்பழத்திற்கு, 7,766 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சந்தை விலையை 1 டன் 5,000 ரூபாய் என கருத்தில் வைத்து, பற்றாக்குறை 2,766 ரூபாயை, 1 டன்னுக்கு செலுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
ஒப்புதல் வேண்டும்
மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள, 62.93 கோடி ரூபாய், மொத்த தொகையாக முன்மொழியப்பட்டுள்ளது.
எனவே, 2.27 லட்சம் டன் பெங்களூரா மாம்பழங்களுக்கு, விலை பற்றாக்குறை கட்டணத்தை விவசாயிகளுக்கு வழங்க, தமிழகத்தில் சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்த, ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.