193 பேருக்கு அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
193 பேருக்கு அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
193 பேருக்கு அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ADDED : செப் 15, 2025 03:01 AM

சென்னை: அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, 193 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு, அண்ணா பதக்கங்கள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி, ஒவ்வொரு ஆண்டும் செப்., 15 அண்ணாதுரை பிறந்த நாளில், தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் ஏட்டு முதல் எஸ்.பி., வரை 150 பேர்; தீயணைப்பு துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குனர் வரை 22; சிறைத்துறையில் முதல் நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரை 10; ஊர்க்காவல் படையில் ஐந்து; விரல் ரேகைப் பிரிவில் இரண்டு கூடுதல் எஸ்.பி.,க்கள், நான்கு தடய அறிவியல் துறை அலுவலர்கள் என, 193 பேருக்கு தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜு, முன்னணி தீயணைப்பாளர் புனிதராஜு ஆகியோர், 2024 டிச., 12ம் தேதி, திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 32 நோயாளிகளை காப்பாற்றினர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர் ராஜசேகர், கடந்த மே 12ம் தேதி மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவின்போது, ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவன் உயிரை காப்பாற்றினார். அவர்களின் துணிச்சலை பாராட்டி, அவர்களுக்கு முதல்வரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீர தீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.