மேட்டூர் அணையை திறந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின் 17.32 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு இலக்கு
மேட்டூர் அணையை திறந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின் 17.32 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு இலக்கு
மேட்டூர் அணையை திறந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின் 17.32 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு இலக்கு
ADDED : ஜூன் 13, 2025 01:21 AM

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா குறுவை சாகுபடிக்கு, முதல்வர் ஸ்டாலின் பாசன நீரை திறந்து வைத்தார்.
நடப்பாண்டு டெல்டா மாவட்டங்களில், 17.32 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துஉள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நேற்று காலை 9:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் எட்டு கண் மதகு வழியே, டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அணை வலதுகரையில், டெல்டா பாசன பகுதிகளில் நடந்த பணிகள் குறித்து வைத்திருந்த படங்களை பார்வையிட்டார்.
அறிக்கை
நேற்று காலை 10:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு, மதியம் 12:00 மணிக்கு 5,000; மாலை 4:00 மணிக்கு 7,000; இரவு 8:00 மணிக்கு 10,000 கன அடி என, படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, பன்னீர்செல்வம், ராஜேந்திரன், சிவசங்கர், மகேஷ், மதிவேந்தன், எம்.பி.,க்கள் செல்வகணபதி, மணி, கலெக்டர் பிருந்தாதேவி, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ரமேஷ், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், அதிகாரிகள் பங்கேற்றனர்.
நீர் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12 முதல் செப்., 15 வரை, 5.22 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படும்.
அதற்கு, 138.52 டி.எம்.சி., நீர் தேவை. அணையில் இருந்து, 125.68 டி.எம்.சி., திறக்கப்படும். மீதி, 12.84 டி.எம்.சி., நீர், மழை மற்றும் நிலத்தடி நீர் வாயிலாக பாசனம் செய்யப்படும்.
டெல்டா மாவட்டங்கள்
நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில், 4 லட்சத்து 91,200 ஏக்கர்; கடலுார், அரியலுார் மாவட்டங்களில், 30,800 ஏக்கர் என, 5.22 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்படும்.
அதற்கு, எட்டு மாவட்டங்களுக்கு, 118.17 டி.எம்.சி., மீதி, இரு மாவட்டங்களுக்கு, 7.51 டி.எம்.சி., நீர் வழங்கப்படும்.
குறுவை சாகுபடி முடிந்து, செப்., 15 முதல் ஜன., 28 வரை, 12.10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்படும். அதற்கு, 268.47 டி.எம்.சி., நீர் தேவை.
காவிரி கரையோரம், 18 மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 155 நீரேற்று நிலையங்கள் உள்ளன.
அவற்றின் வாயிலாக தினமும், 1,707.63 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை.
காவிரி ஆற்றில் இருந்து, 40 ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. டெல்டா மாவட்ட சாகுபடிக்கு பருவமழை காலங்களில் தேவைக்கேற்ப அணையில் இருந்து தண்ணீர் குறைத்தும், வெயில் காலங்களில் அணையில் இருந்து பாசன நீர் அதிகரித்தும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-- - நமது நிருபர் -