Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சென்னையில் 120 மின்சார பஸ்கள்; முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னையில் 120 மின்சார பஸ்கள்; முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னையில் 120 மின்சார பஸ்கள்; முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னையில் 120 மின்சார பஸ்கள்; முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

UPDATED : ஜூலை 01, 2025 12:17 PMADDED : ஜூலை 01, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில், 120 மின்சார பஸ்கள் ஓட துவங்கி உள்ளன. இப்பஸ்களின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

டீசலில் ஓடும் ஒவ்வொரு பஸ்சும், 1 கிலோ மீட்டருக்கு, 755 கிராம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.

697 கோடி ரூபாய்


அதற்கு பதிலாக, மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை பயன்படுத்தினால், கார்பன் உமிழ்வை குறைத்து, காற்றின் தரத்தை கணிசமாக மேம்படுத்தலாம்.

சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில், உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பங்களிப்புடன், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 625 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை என, ஐந்து பணிமனைகள் வாயிலாக மின்சார பஸ்கள் இயக்க, 697 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





மின்சார பஸ்கள் இயக்குவதற்கான கட்டமைப்பு, 'சார்ஜிங்' வசதி, பணிமனைகளில் விரிவாக்க வசதிகள் செய்யப்படுகின்றன.

ஒருமுறை 'சார்ஜ்' செய்தால், மின்சார பஸ் 200 கி.மீ., செல்லும்.

இதற்கிடையே, தமிழகத்தில் முதல் முறையாக, 207.90 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள 120 மின்சார பஸ்கள் இயக்கத்தையும், 47.50 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்ட மின்சார பஸ் பணிமனையையும், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர், நடத்துநர், ஓட்டுநர்களிடம், மின்சார பஸ் இயக்கம் குறித்து கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1,225 மின்சார பஸ்கள்


இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் மட்டும் 1,225 மின்சார பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, 625 மின்சார பஸ்களை கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வந்தன; 120 பஸ்களின் சேவை தற்போது துவக்கப்பட்டு உள்ளது.

அடுத்து, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, ஆலந்துார், பாடியநல்லுார், பெரம்பூர், ஆவடி, அய்யப்பன்தாங்கல் பணிமனைகளில் இருந்து, 1,105 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.

இது தவிர, கோவையில் 80, மதுரையில் 100 மின்சார பஸ்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின்சார பஸ் சேவை துவங்கிய உடன் புறப்பட்டு 1 கி.மீ., துாரத்திற்குள் இரண்டு பஸ்கள் திடீரென நின்றன. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ஓட்டுநரின் சிறு தவறால் பஸ் திடீரென நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

25 சதவீதம் செலவு குறைவு

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:கட்டண உயர்வு இன்றி, தனியார் பங்களிப்போடு மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒப்பந்ததாரருக்கு கி.மீ., ஒன்றுக்கு, 'ஏசி' வசதி இல்லாத மின்சார பஸ்களுக்கு, 77.16 ரூபாய்; 'ஏசி' பஸ்களுக்கு 80.86 ரூபாய், மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக வழங்கப்படும். பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், நடத்துநரை தவிர, இதர பணியாளர்கள் நியமனம், பராமரிப்பு பணிகளை, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமே மேற்கொள்ளும். டீசல் பஸ்சை 1 கி.மீ., இயக்க, 35 ரூபாய் செலவாகும். மின்சார பஸ் இயக்க, 'ஏசி' 8 ரூபாய், 'ஏசி' இல்லாத பஸ்சுக்கு 6 ரூபாய் செலவாகிறது. எனவே, 25 சதவீதம் செலவு குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us