மகளிர் உரிமை தொகை கள ஆய்வு: விரைவாக முடிக்க முதல்வர் உத்தரவு
மகளிர் உரிமை தொகை கள ஆய்வு: விரைவாக முடிக்க முதல்வர் உத்தரவு
மகளிர் உரிமை தொகை கள ஆய்வு: விரைவாக முடிக்க முதல்வர் உத்தரவு
ADDED : செப் 14, 2025 03:07 AM

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான கள ஆய்வை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தலைமைச் செயலர் முருகானந்தம், முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் அமுதா, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் மற்றும் அரசு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
அறிவுரை அப்போது, இத்திட்டத்தின் கீழ், துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அவற்றின் மீதான தீர்வு, நிலுவை விபரங்கள் குறித்து அலுவலர்களிடம், முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
'பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, உரிய கால கட்டத்திற்குள் தீர்வு காணப்படுவதை கண்காணிக்க வேண்டும்' என, துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதுவரை நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், அரசின் 15 துறைகளில் பட்டியலிடப்பட்ட, 46 சேவைகளில், 14 லட்சத்து, 54,517 மனுக்கள் வந்துள்ளன. அதில், 7 லட்சத்து, 23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தீர்வு செய்யப்பட்ட மனுக் களில், 83 சதவீதம் அதாவது 5 லட்சத்து, 97,534 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண வேண்டும். குறிப்பாக, வருவாய், கூட்டுறவு, ஆதிதிராவிடர் நலம், மின்சாரம், ஊரக வளர்ச்சி போன்ற முக்கிய துறைகளின் மனுக்கள் மீது, அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நகராட்சி நிர்வாகத் துறையில் சொத்து வரி, குடிநீர் தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவை களான இடுபொருட்கள், விவசாய இயந்திரங்கள் தொடர்பான மனுக்களின் மீது, அதிக கவனம் செலுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பட்டா சம்பந்தமான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான, கள ஆய்வுகளை விரைந்து முடிக்க வேண்டும். முகாம்கள் நடந்தபோது, மக்கள் தெரிவித்த கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நடவடிக்கை தெருவிளக்கு. இணைப்பு சாலை, குடிநீர் போன்ற சமுதாய கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து மனுக்கள் மீதும் விடுதலின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக, அனைத்து அரசு துறைச் செயலர்கள், கலெக்டர்களுடன், தலைமைச் செயலர் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பணிகளை ஒருங்கிணைத்து, மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசியுள்ளார்.