ஆண் குழந்தைகளுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அவசியம்
ஆண் குழந்தைகளுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அவசியம்
ஆண் குழந்தைகளுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அவசியம்
ADDED : ஜூன் 11, 2025 01:13 AM
சென்னை:'கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, ஆண் குழந்தைகளுக்கும் செலுத்த வேண்டும்' என, புற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், 'சீரம்' நிறுவனத்தின் சார்பில், சென்னையில் நடந்தது. இதில், அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், தன்னார்வ நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் புற்றுநோய் தடுப்பு சிறப்பு நிபுணர் என்.ஜெயஸ்ரீ பேசியதாவது:
கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி நடைமுறையில் இருந்தாலும், விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. குறிப்பாக, 100க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட ஹெச்.பி.வி., வகை வைரஸில், 16, 18 ஆகிய வகைகள், ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
ஆண்களுக்கு கழுத்து, ஆணுறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ் வகை, தாம்பத்திய உறவின் வாயிலாக எளிதாக பெண்களுக்கும் பரவும். இந்த வைரஸ் பெண்களின் உடலுக்குள் நுழைந்து, நீண்ட காலம் தங்கும்போது, புற்றுநோயாக மாறுகிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே இதற்கு பாதுகாப்பு. இதற்கான பரிசோதனையை, திருமணமான பெண்கள் செய்துகொள்ள வேண்டியது அவசியம். மேலும், 9 முதல் 14 வயதிற்கு உட்பட்ட சிறுமியர், இந்த தடுப்பூசி அவசியம் போட வேண்டும்.
ஹெச்.பி.வி., வைரஸ் என்பது கர்ப்பப்பை வாய் புற்றுநோயை மட்டும் ஏற்படுத்துவது இல்லை. எனவே, பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் அதே வயதில், இந்த தடுப்பூசியை ஆண் குழந்தைகளுக்கும் போட வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.