Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அடமான இயந்திரங்களை விற்று மோசடி தனியார் ஆலை மீது சி.பி.ஐ., விசாரணை

அடமான இயந்திரங்களை விற்று மோசடி தனியார் ஆலை மீது சி.பி.ஐ., விசாரணை

அடமான இயந்திரங்களை விற்று மோசடி தனியார் ஆலை மீது சி.பி.ஐ., விசாரணை

அடமான இயந்திரங்களை விற்று மோசடி தனியார் ஆலை மீது சி.பி.ஐ., விசாரணை

ADDED : ஜூன் 26, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
சென்னை:வங்கி கடனுக்கு அடமானமாக தரப்பட்ட இயந்திரங்களை திருட்டுத்தனமாக விற்ற காஞ்சிபுரம் தனியார் சர்க்கரை ஆலைக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரத்தில் 'பத்மாதேவி சுகர்ஸ்' என்ற சர்க்கரை ஆலை உள்ளது.

இந்த ஆலை, ஐ.ஓ.பி., எனும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டும் 120.84 கோடி ரூபாயும், மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாயும் கடனாக பெற்றுள்ளது.

இந்த கடன்களுக்கு, அடமானமாக வைக்கப்பட்டிருந்த ஆலையின் இயந்திரங்களை, கடன் கொடுத்த வங்கிகளுக்கு தெரியாமல் விற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனங்கள் சார்பில் சி.பி.ஐ.,க்கு புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், புகார் மீது விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக் கோரி, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரீநிதி பைனான்ஸ் என்ற நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில், 'ஆலைக்கு வழங்கப்பட்ட கடன்கள் வாராக் கடன்களாக அறிவிக்கப்பட்டு, அந்நிறுவனத்தின் கணக்கு, மோசடி கணக்கு என அறிவிக்கப்பட்டு விட்டது.

'மேலும், மாநில அரசின் அனுமதியின்றி வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் தற்போது இல்லை. அந்த அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளதால், இந்த விவகாரத்தில் எங்களால் வழக்கு பதிவு செய்ய முடியாது' என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட, 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆலை இயந்திரங்கள் விற்கப்பட்டு, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில், வங்கி அதிகாரிகள் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது.

எனவே, நிதி நிறுவனம் 2022 ஆக., 3ல் அளித்த புகார் அடிப்படையில், மூன்று வாரங்களில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

பின், விரிவான விசாரணை நடத்தி, ஓராண்டில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில், சி.பி.ஐ., இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us