ADDED : ஜூலை 02, 2025 01:21 AM
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
அஜித்குமார் மரணத்திற்கு காவலர்கள் நடத்திய தாக்குதல் தான் காரணம் என்பதை அறிந்ததும், நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இது யாராலும் நியாயப்படுத்த முடியாத, காரணம் சொல்லி தப்பிக்க முடியாத செயல். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணையை தொடரலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தில் காவல் துறையை சேர்ந்த ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக் கூடாது. இதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றுமாறு, நான் உத்தரவிட்டுள்ளேன்.
சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும். காவல் துறையினர் தங்களது விசாரணையின் போது, மனித உரிமையை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை, நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.
இதுபோன்ற மீறல் சம்பவங்களை, நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல், எக்காலத்திலும், எங்கும், யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.