சிவில் நீதிபதிகள் நேர்முகத்தேர்வு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
சிவில் நீதிபதிகள் நேர்முகத்தேர்வு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
சிவில் நீதிபதிகள் நேர்முகத்தேர்வு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
UPDATED : பிப் 11, 2024 04:33 AM
ADDED : பிப் 10, 2024 11:57 PM

சென்னை:சிவில் நீதிபதிகள் பதவி களுக்கான நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, அரசு பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 245 சிவில் நீதிபதிகள் பதவிகள் காலியாக இருந்தன. இப்பதவி களுக்கு, கடந்தாண்டு ஜூனில் விண்ணப்பங்களை வரவேற்று, டி.என்.பி.எஸ்.சி., என்ற அரசு பணியாளர் தேர்வாணைம் அறிவிப்பு வெளியிட்டது.
மூன்று கட்டங்கள் உடைய இந்த தேர்வில், கடந்தாண்டு நவம்பரில் நடந்த பிரதான தேர்வின் முடிவுகள், கடந்த மாதம் 5ல் வெளியிடப்பட்டன. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி, பிரதான தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் ஜூலியஸ் மேரா ஸ்மித், அபிஷா உட்பட, 16 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மனு விபரம்:
சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு ஆகிய அமைப்புகள், போட்டி தேர்வுக்கான விடைத்தாள்களை வழங்குகின்றன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி., விடைத்தாள்களை வழங்குவதில்லை.
பிரதான தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி முறையாக நடக்கவில்லை. தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, அவசர கதியில் நடத்தப்பட்டுள்ளது.
எனவே, ஜனவரி 5ல் வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான பட்டியலை நிராகரிக்க வேண்டும். மேலும், சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.
விடைத்தாள்களை வழங்கக்கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு, மனுவுக்கு, டி.என்.பி.எஸ்.சி., மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆகியோர் பதில்அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.