'மாஜி' இன்ஸ்பெக்டரிடம் லஞ்சம் குன்றத்துார் கமிஷனர் கைது
'மாஜி' இன்ஸ்பெக்டரிடம் லஞ்சம் குன்றத்துார் கமிஷனர் கைது
'மாஜி' இன்ஸ்பெக்டரிடம் லஞ்சம் குன்றத்துார் கமிஷனர் கைது
ADDED : ஜன 11, 2024 11:09 PM

குன்றத்துார்:வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு, 24,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, குன்றத்துார் நகராட்சி பெண் கமிஷனர் உள்ளிட்ட மூவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் முனுசாமி, 63; ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்.
இவருக்கும், இவரின் உறவினர்களுக்கும் சொந்தமான வீட்டு மனைகள், குன்றத்துார் நகராட்சி பகுதியில் உள்ளன.
இங்கு வீடு கட்டுவதற்காக திட்ட வரைபட அனுமதி கோரி, குன்றத்துார் நகராட்சி அலுவலகத்தை சில நாட்களுக்கு முன் முனுசாமி அணுகினார்.
அப்போது, திட்ட வரைபடத்திற்கு அனுமதி வழங்க, 24,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முனுசாமி, இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 24,000 ரூபாயை முனுசாமியிடம் கொடுத்து அனுப்பினர்.
அத்துடன், டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ௧௩ பேர், பொதுமக்கள் போல குன்றத்துார் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர்.
முனுசாமியிடம் இருந்து, 24,000 ரூபாய் லஞ்ச பணத்தை, நகராட்சியில் பணியாற்றும் உதவியாளர் சாம்சன் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு துறையினர் மடக்கி பிடித்தனர்.
நகராட்சி ஆணையர் மற்றும் நகரமைப்பு அலுவலர் கூறியதால், லஞ்ச பணத்தை பெற்றதாக சாம்சன் கூறியுள்ளார்.
இதையடுத்து, நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு அலுவலர் பாலசுப்பிரமணி, உதவியாளர் சாம்சன் ஆகிய மூவரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.