Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நெல்லை முன்னாள் எஸ்.ஐ., கொலையில் சிறுவன் கைது

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., கொலையில் சிறுவன் கைது

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., கொலையில் சிறுவன் கைது

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., கொலையில் சிறுவன் கைது

ADDED : மார் 23, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி: திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அலைபேசியில் கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கொலையான எஸ்.ஐ., மகன் ரஹ்மான் தங்களுக்கு துன்புறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் மார்ச் 18 அதிகாலை 5:40 மணியளவில் பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வெளியே வரும் போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அவர் முத்தவல்லியாக இருந்து நிர்வாகம் செய்த தைக்கா நிலம் தொடர்பான சர்ச்சையில் அதே பகுதியில் வசிக்கும் தவ்ஃபீக் என்ற கிருஷ்ணமூர்த்தி தரப்பினரால் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில் கார்த்திக் 32, அக்பர் ஷா 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்ஃபீக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

16 வயது சிறுவன் கைது


இதற்கிடையில் ஜாஹிர் உசேனை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக 11ம் வகுப்பு மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் சரணடைந்த அக்பர் ஷாவின் உறவினரான இச்சிறுவன், ஜாஹிர் உசேன் காலையில் பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு செல்லும் பாதையை கண் காணித்து கொலையாளிகளுக்கு கூறியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

போலீஸ் விசாரணை முடிந்து சிறுவன் சீர்திருத்த இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மகன் வெளியிட்ட வீடியோ


ஜாஹிர் உசேனின் மகன் இச்சூர் ரஹ்மான் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். தற்போது திருநெல்வேலியில் உள்ள அவர், நேற்று வெளியிட்ட வீடியோவில், ''எங்கள் வீட்டை சிலர் நோட்டமிடுகிறார்கள். காலையில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் அலைபேசி மூலம் வீடு முழுவதையும் வீடியோ எடுத்தார்.

நாங்கள் வெளியே சென்ற போது அவர் விரைவாக நகர்ந்தார். நாங்கள் எந்த அச்சத்திலும் இல்லை. ஆனால் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நுார்னிஷாவை கைது செய்ய வேண்டும்.

இவ்வழக்கை திருநெல்வேலி உதவி கமிஷனர் செந்தில்குமார் முறையாக கையாளவில்லை.

அவர் முன்பு நாமக்கலில் பணிபுரிந்த போது கந்தசாமி என்ற நபர் மீதும் இதே போல் பி.சி.ஆர்., வழக்கு தொடர்ந்தவர்.

தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என குறிப்பிட்டிருந்தார்.

வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு


இந்த வீடியோவிற்கு பிறகு போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதி மணி உத்தரவின் பேரில் ஜாஹிர் உசேனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தவ்ஃபீக் என்ற கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்னிஷா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருக்கும் அவர் கேரளாவில் இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதால் போலீசார் அங்கு சென்றுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us