Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்: சுவிஸ் நாட்டிலிருந்து அனுப்பியது யார்?

பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்: சுவிஸ் நாட்டிலிருந்து அனுப்பியது யார்?

பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்: சுவிஸ் நாட்டிலிருந்து அனுப்பியது யார்?

பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்: சுவிஸ் நாட்டிலிருந்து அனுப்பியது யார்?

ADDED : பிப் 09, 2024 11:47 PM


Google News
சென்னை:“சென்னை போலீசில் உள்ள வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததில், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இ - மெயில் அனுப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட் கூறினார்.

சென்னை, அண்ணா நகர், கோபாலபுரம், மாதவரம் என, பல்வேறு பகுதிகளில் உள்ள, 13 தனியார் பள்ளிகளுக்கு, 'இ - மெயில்' வாயிலாக, நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

பதற்றம்


சென்னை தெற்கு மண்டல போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில், அந்த பள்ளிகளில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், ஒரே நேரத்தில் பள்ளிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் வெளியேறியதாலும், பள்ளிகள் முன் பெற்றோர் குவிந்ததாலும் பதற்றம் ஏற்பட்டது.

போலீசார் வேகமாக செயல்பட்டு, மாணவ - மாணவியர் மத்தியில் இயல்பு நிலையை ஏற்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக, ஒன்பது காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.

இப்பிரிவில் உள்ள, சைபர் கிரைம் போலீசார், மிரட்டல் 'இ - மெயில்'கள் குறித்து விசாரித்து வருகின்றனர். அப்போது, 13 பள்ளிகளுக்கும் ஒருத்தரே மிரட்டல் விடுத்துஉள்ளது தெரியவந்தது.

அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து, 'இ - மெயில்' அனுப்பியுள்ளதையும் உறுதி செய்துஉள்ளனர்.

பாதுகாப்பு


கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட் கூறியதாவது:

இனி இது போன்ற மிரட்டல்கள் வந்தால், பதற்றம் அடைய வேண்டாம். நம்மிடம் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான திட்டங்கள், திறமையான போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளனர். கட்டாயம் பாதுகாப்பு அளிக்கப்படும்.

சென்னை மாநகர போலீசில், இதற்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்த தகவல்கள் உள்ளன. மிரட்டல் விடுத்த விதம், காரணம் குறித்த தகவல்களை பதிவு செய்து வைத்துள்ளோம். அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, தற்போது மிரட்டல் விடுத்தவர் புதிய நபர் என்பது உறுதியாகி உள்ளது.

விசாரணையை பாதிக்கும் என்பதால், தற்போதைய சூழலில் எல்லா தகவல்களையும் சொல்ல முடியாது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கட்டாயம் கைது செய்யப்படுவார். இவருக்கு தக்க தண்டனை பெற்றுத் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'இன்டர்போல் உதவியை நாடவில்லை!'


வெளிநாட்டில் இருந்து, தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால், சென்னை மாநகர போலீசார், 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசாரின் உதவியை நாட இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:வெடிகுண்டு மிரட்டல் ஆசாமி, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, 'புரோட்டான்' எனும் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி உள்ளார்.
இது பற்றி, அந்த நிறுவனத்திற்கு, 'இ - மெயில்' வாயிலாக தகவல் தெரிவித்துள்ளோம். அந்த நிறுவனத்திடம் இருந்து, மிரட்டல் ஆசாமி பயன்படுத்திய, 'நெட்வொர்க்' இணைப்புக்கு தரப்படும், 'இன்டர்நெட் புரோட்டோகால்' முகவரியை தெரிவிக்குமாறு கேட்டுள்ளோம். 'ஐ.பி., முகவரியை தருவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. உடனடியாக தர இயலாது' என, கூறினர். வழக்கின் தன்மை குறித்து எடுத்துரைத்து, குற்றவாளியை துப்பு துலக்க உதவிடுமாறு கோரியுள்ளோம்; காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.
அந்த நிறுவனத்தினருடன் தொடர்ந்து சட்ட ரீதியாக பேச்சு நடத்தி வருகிறோம். இப்போதைக்கு, இன்டர்போல் போலீஸ் உதவியை நாடவில்லை. அதற்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். குற்றவாளியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us