'காஷ்மீருக்காக பா.ஜ., கொடுத்த விலை அதிகம்'
'காஷ்மீருக்காக பா.ஜ., கொடுத்த விலை அதிகம்'
'காஷ்மீருக்காக பா.ஜ., கொடுத்த விலை அதிகம்'
ADDED : ஜன 13, 2024 12:25 AM
பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு சார்பில், சென்னையில் நடந்த, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கடந்த 1991ல் காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்ற, அன்றைய பா.ஜ., தலைவர் முரளி மனோகர் ஜோஷி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, ஏக்தா யாத்திரை நடத்தினார்.
அந்த யாத்திரைக்கு பொறுப்பேற்று, வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர், இன்றைய பிரதமர் மோடி. அவரது அரசியல் வாழ்வில், காஷ்மீர் யாத்திரை பெரும் திருப்புமுனை. அதனால், மிகவும் துணிவுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கினார்.
இந்தியா விடுதலை அடைந்தபோது, காஷ்மீருக்கு மட்டும் தனி அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஒரே நாட்டில், இரண்டு விதமான சட்டங்கள்.
இந்தியர்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இல்லாத நிலை இருந்தது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பதைவிட, காஷ்மீரின் தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கு, நாட்டின் முதல் பிரதமர் நேரு முக்கியத்துவம் கொடுத்தார்.
அதுவே, காஷ்மீர் பிரச்னைக்கு காரணம். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின், முதல் இரண்டு ஆண்டுகளில், பா.ஜ.,வைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீருக்காக பா.ஜ., கொடுத்த விலை அதிகம். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், இதுவரை காஷ்மீரில் 1,559 நிறுவனங்கள், 66,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளன. இதன் வாயிலாக, 2 லட்சத்து 93,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் அனைவருக்கும் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் பா.ஜ., தேசியச் செயலர் அனில் ஆண்டனி, காமராஜர் மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.