விக்கிரவாண்டி தொகுதியை பா.ம.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது பா.ஜ.,
விக்கிரவாண்டி தொகுதியை பா.ம.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது பா.ஜ.,
விக்கிரவாண்டி தொகுதியை பா.ம.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது பா.ஜ.,
ADDED : ஜூன் 14, 2024 01:40 PM

சென்னை: விக்கிரவாண்டி தொகுதியை பா.ம.க.,வுக்கு பா.ஜ., விட்டுக் கொடுத்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க., போட்டியிடும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தி.மு.க., - எம்.எல்.ஏ., மறைவால் காலியான விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தி.மு.க., சார்பில், அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணி செயலர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ம.க.,வும் திட்டமிட்டு வந்தது. திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பா.ம.க., தலைவர் அன்புமணி, சட்டசபை பா.ம.க., குழு தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த அன்புமணி, 'விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் விவாதித்தோம். கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசிவிட்டு பா.ம.க.,வின் முடிவை அறிவிப்போம்' என்றார். இது தொடர்பாக பா.ஜ., உடன் பா.ம.க., ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.ஜ., கூட்டணி சார்பில் பா.ம.க., போட்டியிடும். கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு எடுத்த முடிவின்படி, இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடுகிறது எனக்கூறியுள்ளார்.