ஆப்ரிக்க கடல் கொள்ளையர்கள் கடத்திய தேனி வாலிபரை மீட்க பா.ஜ.,வினர் ஏற்பாடு
ஆப்ரிக்க கடல் கொள்ளையர்கள் கடத்திய தேனி வாலிபரை மீட்க பா.ஜ.,வினர் ஏற்பாடு
ஆப்ரிக்க கடல் கொள்ளையர்கள் கடத்திய தேனி வாலிபரை மீட்க பா.ஜ.,வினர் ஏற்பாடு
UPDATED : மார் 25, 2025 05:26 AM
ADDED : மார் 25, 2025 05:19 AM

மதுரை: 'ஆப்ரிக்க பகுதியில் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்ட தேனி வாலிபரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மதுரை பா.ஜ., நிர்வாகிகள் முயற்சியால், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தேனியைச் சேர்ந்தவர் லட்சுமண பிரதீப் முருகன் 32. மூன்று ஆண்டுகளாக மும்பையில் உள்ள மேரிடெக் டேங்கர் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தில் 2ம் நிலை கேப்டனாக பணியாற்றுகிறார். அவர் வணிக கப்பலில் மத்திய ஆப்ரிக்க பகுதியில் சென்றபோது, மார்ச் 17 ல் கடற்கொள்ளையர்கள் கப்பலை தடுத்து கடத்தினர்.
அதில் லட்சுமண பிரதீப் முருகனுடன் மொத்தம் 17 பேர் இருந்துள்ளனர். பொருட்களை கொள்ளையடித்தவர்கள், 7 பேரை அனுப்பிவிட்டு லட்சுமண பிரதீப் முருகன் உட்பட மீதியுள்ள 10 பேருடன் மாயமாகினர்.
அவர்கள் தற்போது வரை எங்குள்ளனர் எனத் தெரியவில்லை. இவர்களில் லட்சுமண பிரதீப் முருகன் உட்பட மூவர் தமிழர்கள். இதையடுத்து தேனியில் உள்ள அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மதுரை நகர் முன்னாள் பா.ஜ., தலைவர் சுசீந்திரன் வழியாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் கவனத்திற்கு பிரச்னையை லட்சுமண பிரதீப் முருகனின் உறவினர் அன்புராஜா கொண்டு சென்றார்.
இதையடுத்து அண்ணாமலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், இவர்கள் விரைவாக தாய்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளார்.