Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விவசாயிகளுக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

விவசாயிகளுக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

விவசாயிகளுக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

விவசாயிகளுக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

UPDATED : செப் 03, 2025 06:17 AMADDED : செப் 03, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
சென்னை:''நாட்டின் வளர்ச்சியில், வங்கி துறை முக்கிய பங்கு வகிக்கிறது; விவசாயிகள் பயனடைய, வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

சிட்டி யூனியன் வங்கியின், 120வது ஆண்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.

விழா மலர் சிறப்பு விருந்தினர்களாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கவர்னர் ரவி, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

விழாவில், சிட்டி யூனியன் வங்கி விழா மலரை நிர்மலா சீதாராமன் வெளியிட, ஜனாதிபதி திரவுபதி முர்மு பெற்றுக் கொண்டார்.

வங்கியின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான நலத்திட்டத்தை, நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான என்.காமகோடி பேசியதாவது:

சிட்டி யூனியன் வங்கி, 1904ல் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் துவக்கப்பட்டது. ஆரம்பத்தில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டன.

தற்போது, 120வது ஆண்டு விழாவை வங்கி கொண்டாடுகிறது. தொடர்ந்து லாபத்துடன் செயல்படுகிறது.

நவீன தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, வங்கி தன்னை மேம்படுத்திக் கொண்டு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது.

தற்போது, வங்கி 22 மாநிலங்களில், 887 கிளைகளுடன் செயல்படுகிறது. வங்கியின் மொத்த வணிகம், 1.21 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சவாலாக உள்ளது ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:

இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு, வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் சிட்டி யூனியன் வங்கிக்கு வாழ்த்துகள். நம் நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் சிறப்பாக உள்ளன. எனினும், அது கிராம மக்களுக்கு சவாலாக உள்ளது.

விவசாயிகள் பயன் அடைய, வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த துறை, அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. சிட்டி யூனியன் வங்கியின் மொத்த கடனில், 40 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு வழங்கப்படுவதற்கு வாழ்த்துகள்.

வங் கிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உதவ, சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தேவைப்படும் அளவுக்கு, கடன் எளிதாக கிடைக்க வேண்டும்.

சமீபகால தொழில்நுட்ப மாற்றங்கள், கிராமங்களையும், விவசாயிகளையும் சென்றடைந்துள்ளன. விவசாயிகளுக்கும், கிராம

பொருளாதாரத்துக்கும் வங்கி துறை முன்னுரிமை அளிக்க வேண்டும்.

டிஜிட்டல் மற்றும் அறிவுசார்ந்த பொருளாதாரம், தொடர்ந்து விரிவடைந்து வருவதால், டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்முனைவோரை உருவாக்குவதில், வங்கிகளின் பங்கு இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை, வங்கிகள் உதவக் கூடிய பல்வேறு துறைகள் உள்ளன. வளர்ந்த இந்தியாவை

உருவாக்குவதில், வங்கிகள் தீவிர பங்குதாரராக மாற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

சிட்டி யூனியன் வங்கி, ஒரு ஆண்டில் கூட நஷ்டம் இல்லாமல், தொடர்ந்து லாபத்துடன் செயல்படுகிறது. இது, தனியார் துறை வங்கிகளுக்கு முன் உதாரணமாக திகழ்வதை காட்டுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், கட்டமைப்புக்கும் தனியார் வங்கிகள் உறுதுணையாக உள்ளன. தற்போது, தனியார் வங்கிகள், நல்ல நிலைமையில் உள்ளன. வங்கிகளின் நிகர வசூலாகாத கடன் அளவு, 2.35 சதவீதமாக குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.8 சதவீதமாக உள்ளது. இது, அனைத்து துறைகளின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. நீண்ட கால கடன் வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் தொடர்ந்து, ஒன்பது மாதங்களாக குறைந்துள்ளது. கடந்த ஜூனில், பணியாளர் வருங்கால வைப்பு திட்டத்தில், கூடுதலாக 22 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்; இது, வேலைவாய்ப்பு அதிகரிப்பை காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us