ஒப்பந்த உதவியாளர்கள் நியமிக்க ரயில்வே மருத்துவமனைகளுக்கு தடை
ஒப்பந்த உதவியாளர்கள் நியமிக்க ரயில்வே மருத்துவமனைகளுக்கு தடை
ஒப்பந்த உதவியாளர்கள் நியமிக்க ரயில்வே மருத்துவமனைகளுக்கு தடை
ADDED : ஜன 06, 2024 08:13 PM
சென்னை:ரயில்வே மருத்துவமனைகளில், ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர்களை நியமிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, 202 உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தீர்ப்பாயம் நிராகரித்தது. இதையடுத்து, 202 உதவியாளர்களையும் நீக்கி, புதிதாக நியமிக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மனுத்தாக்கல்
தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போதைய நிலை தொடர, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த டிசம்பர், 20ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாக ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர்களை நியமிக்கவும் அல்லது, 2023 டிசம்பர் 19க்கு பின் நியமிக்கப்பட்டு, பணியில் தொடர்ந்தாலும் தடை விதிக்கும்படியும் கோரி, மற்றொரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ரயில்வே நிர்வாகம் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, 'பணி உத்தரவு வழங்கப்பட்டது, புதிது அல்ல; கடந்த ஆண்டு மார்ச் மாதமே துவங்கிய நடவடிக்கை, டிசம்பரில் பணி உத்தரவாக முடிவுக்கு வந்துள்ளது.
'ஏற்கனவே உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமன உத்தரவு பெற தயாராக உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் 202 பேர் நியமிக்கப்பட்ட போது, பணி வரன்முறை கோர முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கடந்த டிசம்பர் 20ல், தற்போதைய நிலை தொடர, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது, ஒப்பந்த ஊழியர்கள் நீக்கப்பட்டிருந்தாலும், புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை.
எனவே, டிசம்பர் 22ல், ரயில்வே நிர்வாகம் பிறப்பித்த பணி உத்தரவு, உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவது போலாகும். 202 ஊழியர்களின் சேவை, இனி தேவையில்லை எனக் கருதி, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தால், அது குறித்து பிரதான வழக்கில் முடிவு செய்யப்பட வேண்டும்.
அதேநேரத்தில், 202 ஊழியர்களின் இடங்களில், புதிதாக ஒப்பந்த ஊழியர்களை ஈடுபடுத்துவது என ரயில்வே முடிவெடுத்தால், அத்தகைய ஒப்பந்தத்தை அனுமதிக்க முடியாது.
தள்ளிவைப்பு
எனவே, மருத்துவமனை உதவியாளர்கள் என்ற பெயரில், ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிகமாகவோ, ஊழியர்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்படுகிறது. ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால், 202 ஊழியர்களையும் பணியில் ஈடுபடுத்திக் கொள்வது, ரயில்வேயைப் பொறுத்தது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய, ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, பிப்ரவரி மூன்றாவது வாரத்துக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.