பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை பலியிட தடை கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை பலியிட தடை கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை பலியிட தடை கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 14, 2024 06:32 AM

மதுரை : பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கில், 'சம்பந்தப்பட்ட மதத்தினருக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது. சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் 2023 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்கள், எருமைகள், காளைகள், ஆடுகளை சட்டவிரோதமாக ஆண்டுதோறும் திறந்த வெளியில் பலியிடுவது வாடிக்கையாகி விட்டது.
பல இறைச்சிக் கூடங்களை உருவாக்கி 'குர்பானி' என்ற பெயரில் கால்நடைகளை பலியிடுவது மற்றும் அதை விற்பனை செய்வது குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவுகின்றன. இச்சமயங்களில் கல்லுாரிகள்கூட தற்காலிக வதைக் கூடங்களாக மாற்றப்படுகின்றன. தனிநபர்களால் கால்நடைகளை சட்டவிரோதமாக பலியிடுவதை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை.
கால்நடைகளை நாட்டின் பல பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வருகின்றனர். மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
திருச்சியில் காந்தி மார்க்கெட்டில் உரிமம் பெற்ற ஒரே ஒரு வதைக் கூடம் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்பு (வதைக் கூடம்) விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.
அரசு தரப்பு: திருச்சியில் உரிமம் பெற்று 10 விலங்குகள் வதைக்கூடங்கள் செயல்படுகின்றன. வதைக் கூடங்களை தவிர்த்து பொது வெளியில் கால்நடைகளை பலியிடுவதாக இதுவரை புகார் வரவில்லை. வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மத ரீதியான விழாக்கள் தொடர்பாக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: இது மிகப்பெரிய விவகாரம் தொடர்பானது. ஜூன் 17 ல் பக்ரீத் பண்டிகை வருகிறது. சம்பந்தப்பட்ட சமூகம் அல்லது மதத்தினரின் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளிக்காமல் தற்போதைய நிலையில் இந்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது. சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்மனுதாரர்களாக இணைத்து மனுதாரர் மனு செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 2 வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.