பக்ரீத் ஸ்பெஷல்: மினி கதை புதிய நடைமுறை
பக்ரீத் ஸ்பெஷல்: மினி கதை புதிய நடைமுறை
பக்ரீத் ஸ்பெஷல்: மினி கதை புதிய நடைமுறை
ADDED : ஜூன் 06, 2025 07:25 PM

“மாமா! கொஞ்சம் ரிவர்ஸ் பாருங்களேன். நான் வண்டிய திருப்பப் போறேன்!” என்றார் அக்பர் ஹாஜியார்.
“ஓகே!” என கண் சிமிட்டினார் சேமக்கண்ணு.
காரின் இன்ஜினை உயிர்ப்பித்து 'வரலாமா? வரலாமா?' என கேட்டார் ஹாஜியார்.
சேமக்கண்ணு பின்னால் நின்று இரண்டு முறை ''வரலாம்...'' என்றார், பின் மவுனமானார்.
'சத்தமே காணவில்லையே...' என யோசித்தபடி வண்டியை ஹாஜியார் பின்னோக்கி நகர்த்த, வண்டி, 'டமார்' என சுவற்றில் மோதியது.
கோபத்துடன் வண்டியை விட்டு இறங்கிய ஹாஜியார், கர்ஜித்தார். ''வண்டி மோதிடக் கூடாதுன்னு தானே உங்களை பார்க்க சொன்னேன். ஊமையா இருந்து வண்டிய டேமேஜ் பண்ணிட்டீங்களே, சேமக்கண்ணு...''
''வண்டி ரிவர்ஸ்ல வரும்போது ஒரு முஸ்லிம் என்ன சொல்லணும்னு, ஹதீஸ்ல நபி ஒண்ணும் சொல்லலையே...''
''என்ன உளர்றீங்க மாமா?”
''கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நாம குர்ஆன் ஓதி முடிச்சவுடன், 'சதக்கல்லாஹுல் அழீம்'னு, நம்ம இமாம் சொன்னாரு. 'நபி இப்படி சொல்லல. பித்அத் பண்ணாதிங்க'ன்னு, இமாமை திட்னீங்க ஹாஜியார். இப்ப கார் ரிவர்ஸ்ல வரும்போது, நபி சொல்லாதத நான் சொல்லிட்டா அதுவும் பித்அத் ஆகி விடுமேன்னு வாயை மூடினேன். அது தப்பா?''
''நபி செய்யாததை நாம செய்யலாமா?''
''நபியின் காலத்துக்கு பிற்பட்ட எல்லா விஷயங்களுக்கும் நபிகளிடமிருந்து முன்னுதாரணம் தேடக் கூடாது. மார்க்கத்துக்கு முரணா இல்லாம நம்ம வாழ்க்கை பயணமும், வணக்க வழிபாடும் இருந்தா போதும். குர்ஆனை தொகுத்தது கூட நபி செய்யாதது தானே?”
''காரை டேமேஜ் பண்ணிட்டு, வியாக்கியானம் பேசுறீங்க... ” என்று கூறிவிட்டு பின்பக்கம் நெளிந்த புத்தம் புது காருடன் புறப்பட்டார் ஹாஜியார்.
ஹாஜியாரால் அவமானப்படுத்தப்பட்ட இமாமை பார்த்து, 'மார்க்க தெளிவை ஏற்படுத்தி நோஸ்கட்டும் பண்ணியாச்சு' என, கட்டைவிரல் உயர்த்தினார் சேமக்கண்ணு!
- எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஜலாலி