கூட்டுறவு வங்கியில் நகை கடன் வாங்குவோர் அதிகரிப்பு பின்னணி
கூட்டுறவு வங்கியில் நகை கடன் வாங்குவோர் அதிகரிப்பு பின்னணி
கூட்டுறவு வங்கியில் நகை கடன் வாங்குவோர் அதிகரிப்பு பின்னணி
ADDED : செப் 18, 2025 01:12 AM
சென்னை:கூட்டுறவு வங்கிகளில் சமீப காலமாக நகைக் கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது.
கடன் வாங்கிய அனைவருக்கும் இந்த சலுகையை வழங்காமல், பயனாளிகளை தேர்வு செய்ய பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 2021 மார்ச் வரை வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, தமிழக அரசு உத்தர விட்டது.
இதனால், 14.52 லட்சம் பேரின், 5,013 கோடி ரூபாய் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வரும் சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன.
தற்போது, பலரும் நகைக் கடன் வாங்கி வருகின்றனர். இந்த நிதியாண்டில், கடந்த ஜூலை வரை, 25 லட்சம் பேருக்கு, 25,000 கோடி ரூபாய்க்கு நகைக் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் கேட்டதற்கு, 'வரும் சட்டசபை தேர்தலுக்கும் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், நகைக் கடன் தள்ளுபடியை வாக்குறுதியாக அளிக்கலாம். எனவே, தள்ளுபடி சலுகைக்காக, நகைகளை அடகு வைத்து கடன் பெறுகிறோம்' என்றனர்.