Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/துாய்மை பணியாளர் மீது தாக்குதல்; தி.மு.க., வட்ட செயலருக்கு வலை

துாய்மை பணியாளர் மீது தாக்குதல்; தி.மு.க., வட்ட செயலருக்கு வலை

துாய்மை பணியாளர் மீது தாக்குதல்; தி.மு.க., வட்ட செயலருக்கு வலை

துாய்மை பணியாளர் மீது தாக்குதல்; தி.மு.க., வட்ட செயலருக்கு வலை

ADDED : ஜூன் 10, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் உள்ள, 70 வார்டுகளிலும், 'அவர்லேண்ட்' என்ற தனியார் நிறுவனம் குப்பை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், 1,600 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இதில், இரண்டாவது மண்டலத்தில் குப்பை சேகரிக்கும் பணியில், ஆந்திராவை சேர்ந்த காசராஜ், 42, என்பவர் ஈடுபட்டு வருகிறார். அவர், பெருங்களத்துார் குண்டுமேடு பகுதியில் தங்கியுள்ளார்.

இரண்டாவது மண்டலத்தில் சேகரமாகும் குப்பை, பம்மல் விஸ்வேசபுரம் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. எஞ்சிய 3, 4, 5 ஆகிய மூன்று மண்டலங்களில் சேகரமாகும் குப்பை, மேற்கு தாம்பரம் கன்னடப்பாளையம் கிடங்கில் கொட்டப்படுகிறது.

விஸ்வேசபுரம் கிடங்கிற்குள் செல்லும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டதால், அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. அதனால், இரண்டாவது மண்டல குப்பை, கன்னடப்பாளையம் கிடங்கில் இரண்டு நாட்களாக கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, லோடு ஆட்டோவில் குப்பை ஏற்றிக்கொண்டு, கன்னடப்பாளையம் கிடங்கிற்கு சென்ற காசராஜ், அங்கு குப்பையை கொட்டிவிட்டு திரும்பினார்.

அப்போது, தாம்பரம் மாநகராட்சி, 52வது வட்ட தி.மு.க., செயலர் விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் சேர்ந்து, 'பல்லாவரம் குப்பையை, எதற்காக எங்கள் பகுதிக்கு கொண்டு வந்து கொட்டுகிறாய்' என கேட்டு, உருட்டு கட்டையால் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

தொடர்ந்து, இரும்பு பைப் மற்றும் கட்டையால், காசராஜை சரமாரியாக தாக்கினர். இதற்கிடையில், மூன்று வாகனங்களில் குப்பை கொட்ட வந்த ஊழியர்கள், காசராஜ் தாக்கப்படுவதை பார்த்து சத்தம் போட்டனர். இதையடுத்து, விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள், அங்கிருந்து தப்பினர்.

காயமடைந்த காசராஜை, சக பணியாளர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அவர்லேண்ட் நிறுவனத்தினர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us