கேட்டது ரூ.10,000 கோடி கிடைத்தது ரூ.3,800 கோடி தமிழக அரசுக்கு 'நபார்டு' வழங்கிய கடன்
கேட்டது ரூ.10,000 கோடி கிடைத்தது ரூ.3,800 கோடி தமிழக அரசுக்கு 'நபார்டு' வழங்கிய கடன்
கேட்டது ரூ.10,000 கோடி கிடைத்தது ரூ.3,800 கோடி தமிழக அரசுக்கு 'நபார்டு' வழங்கிய கடன்
ADDED : செப் 11, 2025 10:13 PM
சென்னை:தமிழக விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில், 17,000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, 'நபார்டு' எனப்படும், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியிடம் இருந்து, குறைந்த வட்டியில், 10,000 கோடி ரூபாயை கூட்டுறவு துறை கடனாக கேட்டதற்கு, 3,800 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது.
தமிழகத்தில், மக்களிடம் இருந்து திரட்டப்படும் 'டிபாசிட்' தொகை, நபார்டு வங்கியிடம் இருந்து வாங்கப்படும் கடன் ஆகியவற்றின் வாயிலாக, கூட்டுறவு நிறுவனங்கள், பயிர் கடன்கள் வழங்குகின்றன. நடப்பு நிதியாண்டில், 17,000 கோடி ரூபாய்க்கு பயிர் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 10,000 கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, நபார்டு வங்கியிடம், தமிழக அரசு கேட்டது. தற்போது, 3,800 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விவசாயிகளுக்கு உதவ, கடன் தொகை ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகிறது. எனவே, இந்தாண்டில், 17,000 கோடி ரூபாய் கடன் வழங்க, நபார்டு வங்கியிடம் குறைந்த வட்டியில், 10,000 கோடி ரூபாய் கடன் கேட்கப்பட்டது.
அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளுக்கும், 4 சதவீத வட்டியில், நபார்டு வங்கி கடன் வழங்குகிறது. இந்த நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதால், குறைந்த வட்டி வசூலிக்கிறது. இது தவிர, நபார்டு வங்கி, தன் சொந்த நிதியில் இருந்தும், பயிர் கடன் வழங்க நிதி ஒதுக்குகிறது. இதற்கு, 7 சதவீத வட்டி விதிக்கிறது. மத்திய அரசு குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிர் கடனுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து விட்டது.
இதனால், நபார்டு வங்கியும் குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடனை, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் குறைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.