சிவன், பார்வதி தமிழரா? திருமா 'டவுட்'
சிவன், பார்வதி தமிழரா? திருமா 'டவுட்'
சிவன், பார்வதி தமிழரா? திருமா 'டவுட்'
ADDED : ஜூன் 26, 2025 01:36 AM

சென்னை: ''முருகன் தமிழ்க்கடவுள் என்றால், அவரது அப்பா சிவனும், தாய் பார்வதியும் தமிழர்களாகவே இருக்கக்கூடும். கயிலாய மலையும் தமிழர்களுக்கு தான் சொந்தம்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
அவர் கூறியதாவது:
ஹிந்து மதம் என ஒன்று கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகே, ஹிந்து மதம் உருவானது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது. ஆனால், அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது ஹிந்து மதம். ஓட்டுக்காக, முருக பக்தர் என்று சொல்லி, மாய வலை வீச பார்க்கின்றனர்.
அவர்கள் சொல்லும் கதைப்படி, முருகன் தமிழ்க்கடவுள் என்றால், அவரது அப்பா சிவன் தமிழன்; பார்வதி தமிழச்சியாகத்தான் இருக்க வேண்டும். சிவன், பார்வதி தமிழர்கள் என்றால், கணேசனும் தமிழனாகத்தான் இருக்க முடியும்.
ஆனால், கணேசனை யாரும் ஏன் தமிழ்க்கடவுள் என்று சொல்வதில்லை. இந்த லாஜிக்கை கேட்டால், அவர்களுக்கு கோபம் வரும். சிவனும், பார்வதியும் கயிலாய மலையில் இருக்கின்றனர் என்றால், கயிலாயம் தமிழரின் தேசம் தானே.
அப்படியென்றால் ஒட்டுமொத்த இந்தியாவும், தமிழர் தேசியம் தானே. கயிலாய மலை தமிழனுக்கு சொந்தம் என்றால், இமயம் முதல் குமரி வரை தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு சிவபெருமானே சான்று.
இந்தியாவில் உள்ள ஜாதிய கட்டமைப்பை அணு ஆயுதங்களால்கூட அழிக்க முடியாது. அதனால்தான், இன்றைக்கும், நமது கட்சிக்கொடி கட்டவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் போராட வேண்டியுள்ளது.
திருநீறை அழித்தது குறித்து பேசுபவர்கள், மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா? புண்ணியம் கிடைக்கும் என்ற நோக்கில் திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் வகையில் அழிக்கவும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.