ஜூன் 2ல் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர்
ஜூன் 2ல் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர்
ஜூன் 2ல் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர்

சென்னை: ''சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில், வரும் ஜூன் 2ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
வி.சி., - சிந்தனைச்செல்வன்: தமிழகத்தில் பிறந்த இசை மேதை இளையராஜா, லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்து, சாதனை படைத்துள்ளார்.
லண்டனில் ஒலித்த சிம்பொனி இசையை, தமிழகத்தில் கேட்க முடியாதா என்ற ஏக்கம் தமிழக மக்களுக்கு உள்ளது. எனவே, தமிழகத்தில் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்ற, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: இளையராஜாவை நான் சந்தித்தபோது, லண்டனில் ஒலித்த சிம்பொனி இசையை தமிழகத்திலும் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன். சிம்பொனி இசையை தமிழகத்தில் அரங்கேற்றம் செய்ய இருப்பதாக அவரும் உறுதியாக தெரிவித்தார்.
ஆனால், லண்டனில் இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்தில் பங்கேற்ற, 400 கலைஞர்களையும் நினைத்த நேரத்தில் தமிழகத்திற்கு அழைத்து வர முடியாது. அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
வரும் ஜூன் 2ம் தேதி, இளையராஜாவின் பிறந்த நாள். அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து, 50 ஆண்டுகள் நிறைவடையும் நாளும் வருகிறது.
எனவே, தமிழக அரசின் சார்பில், திரையுலகில் 50 ஆண்டு விழாவும், லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ததற்காக, அவருக்கு பாராட்டு விழாவும், ஜூன் 2ம் தேதி சென்னையில் நடத்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.