பிப். 10க்குள் யாத்திரையை முடிக்க மேலிடம் அறிவுரை
பிப். 10க்குள் யாத்திரையை முடிக்க மேலிடம் அறிவுரை
பிப். 10க்குள் யாத்திரையை முடிக்க மேலிடம் அறிவுரை
UPDATED : ஜன 12, 2024 01:16 AM
ADDED : ஜன 12, 2024 12:21 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில், மாநிலம் முழுதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தென்மாவட்டங்கள், மேற்கு, டெல்டா மாவட்டங்களில் யாத்திரையை முடித்த அண்ணாமலை, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய முக்கிய கட்சிகள், தேர்தல் தொடர்பான பணிகளை துவக்கி விட்டன. தமிழக பா.ஜ., சார்பிலும், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உ.பி., மாநிலத்தில், வரும், 22ல் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதற்கு பின், பா.ஜ., தலைமை லோக்சபா தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்த உள்ளது. எனவே, தமிழகத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து விரைந்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதற்காக, பாதயாத்திரையை பிப்., 10ம் தேதிக்குள் முடிக்குமாறு அண்ணாமலையை, தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அண்ணாமலை தினமும் மூன்று தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்; தேர்தல் நெருங்கி விட்டதால், விரைவில் நிறைவு செய்யும் வகையில், வரும் நாட்களில் தினமும் நான்கு தொகுதிகளில் யாத்திரை மேற்கொள்வார்' என்றார்.