Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அண்ணா பல்கலை பாலியல் வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து!

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து!

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து!

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து!

UPDATED : மே 28, 2025 12:43 PMADDED : மே 28, 2025 11:59 AM


Google News
Latest Tamil News
சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று (மே 28) போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார்.

தண்டனை விவரம் ஜூன் 2ல் அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி.

போலீசாரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது? ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?

வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் போலீசார் அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்? யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. காலம் மாறும்! காட்சிகள் மாறும்! விரைவில் அ.தி.மு.க., ஆட்சி அமையும்.

அண்ணாமலை வரவேற்பு

இது குறித்து தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, கோர்ட் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பா.ம.க., செயல் தலைவர், அன்புமணி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதாலேயே அனைத்தும் முடிந்து விட்டதாக அர்த்தமல்ல. இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றஞ்சாட்டப்பட்டார். அதனால் தான் அவர் மட்டும் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்லாமல் மேலும் பல மாணவிகள் ஞானசேகரனால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஞானசேகரனின் குற்றங்களில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளால் கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதால் மட்டுமே முழுமையான நீதி கிடைத்து விடவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருந்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஞானசேகரனுக்கு வரும் ஜூன் 2ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் போது, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழக பா.ஜ., தலைவர், நயினார் நாகேந்திரன்

தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க.,வின் உடன்பிறப்பான ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிபடுத்திய சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.

பெண்களின் மீது வன்முறை ஏவுபவர்கள் அரசியல் பின்புலமும் பணபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ள இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும்.

அரசியல் ரீதியாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே தனது முழுவிபரத்தை வெளியிட்டு பழி வாங்கினாலும் மனம் தளராது நீதிக்காக போராடி இன்று அதில் வெற்றி கண்டுள்ள அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது பாராட்டுகள்

தே.மு.தி.க., பொதுச்செயலாளர், பிரேமலதா

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளதை தே.மு.தி.க., வரவேற்கிறது. குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் தவறு செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது பாடமாக அமைய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us