Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சூரிய ஒளி மின் திட்டத்தில் நில வகை மாற்ற கட்டணத்தை தமிழக அரசு முற்றிலும் நீக்கணும்! அகில இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன் வலியுறுத்தல்

சூரிய ஒளி மின் திட்டத்தில் நில வகை மாற்ற கட்டணத்தை தமிழக அரசு முற்றிலும் நீக்கணும்! அகில இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன் வலியுறுத்தல்

சூரிய ஒளி மின் திட்டத்தில் நில வகை மாற்ற கட்டணத்தை தமிழக அரசு முற்றிலும் நீக்கணும்! அகில இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன் வலியுறுத்தல்

சூரிய ஒளி மின் திட்டத்தில் நில வகை மாற்ற கட்டணத்தை தமிழக அரசு முற்றிலும் நீக்கணும்! அகில இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன் வலியுறுத்தல்

ADDED : செப் 11, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
கோவை; ''சூரிய ஒளி மின் திட்டங்களை நிறைவேற்றுவதில், தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். சூரிய ஒளி மின் திட்டங்களை அமைக்க, நிலவகை பயன்பாடு மாற்றத்துக்கான கட்டணத்தை தமிழக அரசு முற்றிலும் நீக்க வேண்டும்,'' என, அகில இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன் தெரிவித்தார்.

'குளோபல் சோலார் எக்ஸ்போ-2025' கோவை 'கொடிசியா' வளாகத்தில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது.

துவக்க விழாவில், அகில இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன் பேசியதாவது:

மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்துவதிலும், உற்பத்தி செய்வதிலும் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2030க்குள் உற்பத்தி செய்ய வேண்டிய மரபுசாரா எரிபொருள் இலக்கில், 50 சதவீதத்தை எட்டி விட்டோம். சாதாரண மனிதர்களும், சாமானிய விலையில் மின்சாரத்தை பெற வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு சோலார் மின் உற்பத்தியில், 11 ஜிஹா வாட் அளவை எட்டியுள்ளது. காற்றாலை, சூரிய மின் உற்பத்தியில் இதுவரை, 25 ஜிகாவாட் அளவை எட்டியுள்ளது. பொதுத்துறை எரிசக்தி நிறுவனங்கள் பல, சூரிய ஒளி மின் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றன.

சூரிய ஒளி மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். கேரள மாநிலத்தில் ஐந்து மெகாவாட் அளவுக்கு மின்சாரம், 2 லட்சம் வீடுகளில் இருந்து உற்பத்தியாகிறது. தமிழகத்தில் இது, 20,000 வீடுகளாக மட்டுமே உள்ளது. வீடுகளில் சூரிய ஒளி மின் திட்டங்களை அமைக்க, மத்திய அரசு மானியம் அளிக்கிறது.

இரண்டு கிலோ வாட்டுக்கு இரண்டு லட்சம் செலவானால், 72 ஆயிரம் ரூபாய் மானியமாக தரப்படுகிறது. சூரிய ஒளி மின் திட்டங்களை அமைக்க, நிலவகை பயன்பாடு மாற்றத்துக்கு தமிழக அரசு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கிறது. இதை முற்றிலும் நீக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

'அதிநவீன மின் சேமிப்பு பேட்டரி சீனாவிடம் இருந்து வாங்க திட்டம்'


அகில இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன் நிருபர்களிடம் கூறியதாவது: மரபுசாரா மின் சக்தியை சேமிக்க அதிநவீன பேட்டரியை மத்திய அரசு நிறுவ கொள்கை முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதும் சீரான மின்சாரம் பெறவும், மரபுசாரா மின் சக்தியை சேமித்து பயன்படுத்தவும் இந்த பேட்டரிகள் பயன்படும். உச்சபட்ச தேவை ஏற்படும்போது, சீரான மின்சாரம் பெற உதவும்.
இரண்டாவது கட்டமாக, 30 ஜிகா வாட் அளவுக்கு உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றுக்கான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லாததால், சீனாவுடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்றங்களை செய்து, இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன், சீனாவுக்கு குழுவினர் சென்றிருந்தனர். சீனாவுடன் ஏற்பட்டுள்ள நட்பான சூழ்நிலையால் வரி விகிதங்களை குறைக்க பேச்சு நடக்கிறது. பல்வேறு நிறுவனங்கள், தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பயன்படுத்த துவங்கியுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us