அலங்காநல்லுார் ஏறு தழுவுதல் அரங்கு தமிழர்களின் பண்பாட்டு சின்னம்: ஸ்டாலின்
அலங்காநல்லுார் ஏறு தழுவுதல் அரங்கு தமிழர்களின் பண்பாட்டு சின்னம்: ஸ்டாலின்
அலங்காநல்லுார் ஏறு தழுவுதல் அரங்கு தமிழர்களின் பண்பாட்டு சின்னம்: ஸ்டாலின்
UPDATED : ஜன 25, 2024 02:02 AM
ADDED : ஜன 25, 2024 01:18 AM

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில், 62.78 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அரங்கை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
மதுரையை துாங்கா நகரம் என்பர். போட்டி என்று வந்து விட்டால், தோல்வியை துாள் துாளாக்கும் நகரம் என்பதை, ஜல்லிக்கட்டு வாடிவாசல்கள் ஆண்டுதோறும் மெய்ப்பித்து கொண்டிருக்கின்றன.
பெருமை
தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், தமிழின பெருமையை சொல்லும் கீழடி அருங்காட்சியகம், மதுரையில் கருணாநிதி பெயர் கொண்ட பிரமாண்ட நுாலகம், கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கு என, மூன்று கம்பீர சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதை சொல்லும் போது, 2015ல் மத்திய அரசு மதுரைக்கு அறிவித்து, இன்னும் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பிரமாண்டமாக இங்கே அமைந்துள்ள இந்த அரங்கு, தமிழர்களின் பண்பாட்டு சின்னம். தமிழினத்தின் பண்பாட்டு மரபின் தொடர்ச்சி.
தையில் ஏறு தழுவுதல் நடக்கும்போது அலங்காநல்லுார், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்கள் உற்சாகத்தோடு காணப்படும். இந்த பண்பாட்டுத் திருவிழா உலகம் முழுதும் பேச வேண்டும் என்று தான், இங்கு இந்த அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்விழாவை பிரமாண்டமாக ஏற்பாடு செய்த அமைச்சர் மூர்த்தி, தை பிறந்தாலே ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறி விடுவார். அந்த அளவிற்கு ஜல்லிக்கட்டை உயிராக கருதுகிறார்.
கடந்த 1974ல் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை கருணாநிதியும் நடத்தியுள்ளார். 2006ல் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயத்தை நீதிமன்றம் தடை செய்தபோது, 'பாதுகாப்பாக நடத்துவோம்' என உறுதியளித்து அனுமதி பெற்றவர் கருணாநிதி.
கடந்த, 2007ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோதும் தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை முன்வைத்து அனுமதி பெற்றதும் தி.மு.க., ஆட்சியில் தான். ஆட்சி மாறியதும், 2014ல் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது.
இளைஞர்கள் போராட்டத்தின் தீவிரத்தால், அப் போதைய அ.தி.மு.க., ஆட்சி அடிபணிந்தது.
ஒற்றுமையை சிதைக்க
பின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது, 'ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் போன்ற போட்டிகளை ஊக்குவிக்கும் திட்டமில்லை. கேலோ இந்தியா போன்ற திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை' என மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், தி.மு.க.,வின் தீவிர முயற்சியால், 'தடையில்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்' என்ற வரலாற்று தீர்ப்பை, கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் பெற்றோம்.
இந்த தருணத்தில் நான் வலியுறுத்துவது என்னவென்றால், ஜாதி பிளவுகள், மத வேறுபாடுகள், தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை. இதை உணர்ந்து இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை ஒற்றுமையுடன் நடத்துவோம் என்பது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.