Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி விளக்கம்

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி விளக்கம்

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி விளக்கம்

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி விளக்கம்

ADDED : மார் 16, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
சென்னை: கருத்துக்கேட்பு கூட்டங்களில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, முடிந்தவரை பட்ஜெட் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு உள்ளதாக, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி கூறினார்.

வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின், அவர் அளித்த பேட்டி:


வேளாண் துறை தனி பட்ஜெட்டிற்கு, 2021 - 22ம் ஆண்டு, 34,221 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது, 2025 - 26ம் ஆண்டில், 45,661 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேளாண் துறைக்கு அதிகபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செவ்வந்தி சாகுபடி


அகில இந்திய அளவில் கேழ்வரகு சாகுபடியில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம், எண்ணெய் வித்துகள், கரும்பு, மரவள்ளி, புளி, மல்லிகை, கிராம்பு, கறிவேப்பிலை, ஜாதிக்காய், மஞ்சள், செவ்வந்தி சாகுபடியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நிலக்கடலை, சிறுதானியங்கள், தேங்காய் உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். இது, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.

வேளாண் பட்ஜெட் தாக்கலின் பயனாக சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2019 - 20ம் ஆண்டு, 1.46 கோடி ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, தற்போது, 1.51 கோடி ஏக்கராக அதிகரித்துள்ளது. இருபோக சாகுபடி, 29 லட்சம் ஏக்கராக இருந்தது; தற்போது, 33 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

தரிசு நிலங்கள், 45,000 ஏக்கர் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் என, அனைத்து வகை பயிர்கள் சாகுபடிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது; எந்த பயிரையும் விட்டுவிடவில்லை.

அனைத்து மாவட்ட விவசாயிகளையும் சென்று சேரும் வகையில், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கடைகோடியில் உள்ள விவசாயிக்கும் பலன் போய் சேரும் என்பது உறுதி. இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரித்து, ஊட்டச்சத்து பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம். தொழிலாளர்கள் பற்றாக்குறையால், வேளாண் இயந்திரங்களுக்கும் அதிகபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதிகம் உற்பத்தியாகும் போது, தக்காளி உள்ளிட்ட விளைபொருட்கள் வீணாவதை தடுக்க, மதிப்புகூட்டும் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

சேவை மையம்


காலநிலை மாற்றத்தை சமாளித்து, சாகுபடி செய்வதற்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக, 5,000 சிறிய பால் பண்ணைகள் அமைக்க, விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

முதல்வர் மருந்தகங்களை போல, உழவர்நல சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இங்கு வேளாண் இடுபொருட்கள், வாடகை இயந்திரங்கள், மானிய திட்டங்கள் பதிவு உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. வேளாண் பட்டதாரிகளிடம் உழவர்நல சேவை மையங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.

'உழவரை தேடி வேளாண்மை' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஏதாவது ஒரு கிராமத்தில், முகாம்கள் நடத்தப்படும். இதில், வேளாண்மை உள்ளிட்ட தொடர்புடைய துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவர்.

இளைய தலைமுறையினருக்கு இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளி - கல்லுாரி மாணவர்களுக்கு, 'கண்டுணர் சுற்றுலா' ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

காலநிலை மாற்றத்தால் என்னென்ன பாதிப்புகளை வேளாண் துறை சந்திக்கும் என்பதை, வேளாண் பல்கலை விரிவாக ஆய்வு செய்துள்ளது.

இதுதொடர்பாக, 385 வட்டாரங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒரு கிராமத்தை தேர்வு செய்து, விவசாயிகளுக்கு 2030 மற்றும் 2050ம் ஆண்டுகளில் மழை, வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. அதற்கேற்ப சாகுபடி முறைகளை மாற்றவும், அறிவுரை வழங்கப்படும்.

கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகளுக்கு டன்னுக்கு, 3,500 ரூபாய் கிடைக்கும். வேளாண் பட்ஜெட் தொடர்பாக, விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதில் விவசாயிகள் தெரிவித்த பெரும்பாலான கருத்துக்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் கொண்டு வந்திருக்கிறோம்.

பனை வளர்ப்பு


டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு குறுவை தொகுப்பு, இயற்கை வேளாண் இடுபொருட்கள் விற்பனை, கோடை உழவு மானியம், சிறிய வேளாண் இயந்திரங்கள் மானியம் உள்ளிட்ட, விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் திட்டங்களாக வடிவம் பெற்றுள்ளன. விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளோம்.

பனை வளர்ப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது. பனை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதற்கும் ஊக்கமளிக்கப்படும். கள் இறக்க அனுமதி வழங்குவது, அரசின் கொள்கை முடிவு; அதைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us