வேளாண் பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்
வேளாண் பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்
வேளாண் பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

முக்கிய அம்சங்கள் சிறப்பு தொகுப்பு டெல்டா அல்லாத, 29 மாவட்டங்களில் சராசரியாக, 34 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கு, இம்மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதை, 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
முன்னேற்ற திட்டம்
திருவண்ணாமலை, நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பத்துார், திருநெல்வேலி, வேலுார், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோவை ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள, 63,000 மலைவாழ் விவசாயிகள் பயன் பெறும் வகையில், மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
உழவுக்கு மானியம்
தமிழகத்தில், 56 லட்சத்து, 41 ஏக்கர் மானாவாரி நிலங்களில், பருவ மழையை மட்டுமே ஆதாரமாக கொண்டு, பயிர் சாகுபடி நடந்து வருகிறது. இங்கு, 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்வதற்கு, 2.4 ஏக்கருக்கு 2,000 ரூபாய் வீதம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்திற்கு, 24 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
ஆதிதிராவிடர்களுக்கு...
ஒருங்கிணைந்த பண்ணைகள், பசுமைக் குடில்கள், நிழல்வலை குடில்கள் அமைத்தல், சூரியசக்தி உலர்த்திகள், சூரியசக்தி பம்ப் மோட்டார்கள், மதிப்புகூட்டப்பட்ட இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் வாங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பங்கு தொகை செலுத்த, 60 முதல் 70 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
விதை கொள்முதல்
மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக, 39,500 டன் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் உயர் விளைச்சல் ரக விதை உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
வேளாண் காடுகள்
உயர் மதிப்புமிக்க அதிக பலனளிக்கும் மரங்களை சாகுபடி செய்து, விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில், வேளாண் காடுகள் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. சந்தனம், செம்மரம், மகோகனி, ஈட்டி போன்ற மரங்களை வளர்ப்பதற்கும், அவற்றை பதிவு செய்தல், வெட்டுதல், விற்பனைக்கு எடுத்து செல்லுதல் போன்ற அனைத்து நடைமுறைகளை எளிதாக்கவும், தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்.