'ஆதி கலைக்கோல்' பயிற்சி சென்னையில் 23ல் துவக்கம்
'ஆதி கலைக்கோல்' பயிற்சி சென்னையில் 23ல் துவக்கம்
'ஆதி கலைக்கோல்' பயிற்சி சென்னையில் 23ல் துவக்கம்
ADDED : செப் 14, 2025 05:58 AM

சென்னை: தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' சார்பில், 'ஆதி கலைக்கோல் -- 2025' என்ற தலைப்பில், எஸ்.சி., -- எஸ்.டி., இளைஞர்களுக்கான மூன்று நாள் பயிற்சி பட்டறை, சென்னையில் வரும் 23ம் தேதி துவங்க உள்ளது.
இது குறித்து, 'தாட்கோ' அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், 'ஆதி கலைக்கோல் கலை இலக்கிய சங்கமம்' என்ற தலைப்பில், கடந்த ஆண்டு டிசம்பரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியின்போது, இச்சமூகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கலைஞர்களின், 300க்கும் அதிகமான புகைப்படங்கள்; 100க்கும் மேற்பட்ட பழமையான ஓவியங்கள் பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
அதேபோல், இச்சமூக மக்களின் தொன்மையான இசைக் கருவிகள், ஆடை, ஆபரணம், நையாண்டி மேளம், ஆதிவாசி நடனம், துடுப்பாட்டம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட மறைக்கப்பட்ட கலைகள் மீட்கப்பட்டன.
இதன் வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மறைக்கப்பட்ட வரலாற்றை பலரும் அறிந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, 'ஆதி கலைக்கோல் -- 2025' என்ற தலைப்பில், இச்சமூக இளைஞர்களுக்கு மூன்று நாள் பயிற்சி பட்டறை, சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், வரும் 23ம் தேதி நடக்க உள்ளது.
இதில், நாடக கலைகள், இலக்கிய கலைகள் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.