ஜன்தன் யோஜனா பெயரில் மோசடி எச்சரிக்கிறார் ஏ.டி.ஜி.பி.,
ஜன்தன் யோஜனா பெயரில் மோசடி எச்சரிக்கிறார் ஏ.டி.ஜி.பி.,
ஜன்தன் யோஜனா பெயரில் மோசடி எச்சரிக்கிறார் ஏ.டி.ஜி.பி.,
ADDED : பிப் 24, 2024 09:44 PM
சென்னை:பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி, இணையவழி மோசடி நடப்பதாக, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
பொது மக்களை குறிவைத்து, 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மோசடிகள் நடந்து வருகின்றன. பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா என்ற பெயரை பயன்படுத்தி, 5,000 ரூபாய் பெறலாம் என்ற வகையில் மோசடி நடந்து வருகிறது.
'பின் நம்பர்'
பிரதமர் புகைப்படத்துடன் கூடிய, மக்களை கவர்ந்திழுக்கும் விளம்பரத்தை, 'கிளிக்' செய்தவுடன், 'ஸ்கிராட்ச் கார்டு' கொண்ட மோசடி இணையதளம் தோன்றும். அது கீறப்பட்டால் ஒரு தொகை காண்பிக்கும்.
அதை தொடும்போது, மொபைல் போனில் உள்ள, 'ஜிபே, போன்பே, பேடிஎம்' போன்ற செயலிகளுக்கு செல்லும்.
நீங்கள் அத்தொகை பெற, உங்களது யு.பி.ஐ., 'பின் நம்பரை' உள்ளீடு செய்யுமாறு துாண்டுகிறது. தொகையை பெற, 'பின் நம்பர்' உள்ளீடு செய்ய தேவையில்லை என்ற விபரம் தெரியாததால், அவசர அவசரமாக உள்ளீட்டு செய்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்து விடுகின்றனர்.
நடவடிக்கை
இதுபோன்ற திட்டங்களை எதிர்கொள்ளும்போது, மக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம்.
எந்தவொரு திட்டம் அல்லது சலுகை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் முன்னும், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அரசாங்க திட்டங்கள், பொதுவாக பிரத்யேக இணையதளங்கள் அல்லது தகவல்களை பரப்புவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சேனல்களை கொண்டிருக்கும். சட்டப்பூர்வமான திட்டங்களில் பெரிய தொகைகள் வழங்குவது அரிது.
விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் வகையில், 'பின் நம்பர்' அல்லது வங்கி விபரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். சமூக வலைதளங்களில் நடக்கும் மோசடிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மோசடியில் பாதிக்கப்பட்டிருந்தால், '1930' என்ற உதவி எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.