ADDED : மார் 25, 2025 04:33 AM

சென்னை : திரைப்பட கவர்ச்சி நடிகை சோனா, சென்னையில் உள்ள 'பெப்சி' அலுவலகம் முன், நேற்று திடீர் தர்ணா போராட்டத்தை துவக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா ஹெய்டன், 45. கடந்த 2002ல், 'மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்ற இவர், நாயகியாகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தார். ஆனால், சிறு வேடமே கிடைத்தது.
இதனால், கவர்ச்சியில் இறங்கியவர், 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என, பல படங்களில் நடித்தார். தமிழில், கனிமொழி என்ற படத்தையும் தயாரித்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.
தன் வாழ்க்கை வரலாற்றை, 'ஸ்மோக்' என்ற பெயரில், 'வெப் சீரிஸ்' ஆகவும் இயக்கி வருகிறார். ஆனால், இதை இயக்கி வெளியிடக்கூடாது என பலர் மிரட்டி வந்ததாக, சோனா புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகமான, 'பெப்சி' வளாகத்தில் நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் சோனா இறங்கினார்.
அவர் அளித்த பேட்டி:
நான் எடுத்த என் வாழ்க்கை வரலாற்றை கூறும், 'ஸ்மோக்' படத்தின், 'ஹார்ட் டிஸ்க்'கை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கின்றனர். எங்களிடம் மேலாளராக வேலை பார்த்த சங்கர் என்பவர், 8 லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கிவிட்டு, தொழிலாளர்களுக்கு தராமல் ஏமாற்றியுள்ளார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பெப்சியிடம் முறையிட்டு இருந்தேன்; இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் தனியாக வசிக்கிறேன்.
என் வீட்டுக்கு இரவு நேரங்களில் வந்து, பலர் தொல்லை தருகின்றனர். ஏற்கனவே, ஒரு முறை காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன். அதனால், என்னை சினிமாவில் நடிக்க விடாமல் செய்து விட்டனர்.
அதனாலேயே, நான் வெப் தொடருக்கு மாறினேன். படத்தை ஆரம்பித்த நாள் முதல், பலர் பிரச்னை செய்கின்றனர். என்னால் சமாளிக்க முடியவில்லை; அதனாலேயே, போராட முடிவு எடுத்து விட்டேன்.
எனக்கு என் படத்தின் ஹார்ட் டிஸ்க் வேண்டும். ஏமாற்றி பெற்ற பணத்தையும் தர வேண்டும். அதுவரை தினமும் காலை இங்கு வந்து அமர்ந்து விடுவேன்.
இவ்வாறு சோனா கூறினார்.