நடிகர் விஜய் தப்பு தப்பாக உளறுகிறார் காசிமுத்துமாணிக்கம் குற்றச்சாட்டு
நடிகர் விஜய் தப்பு தப்பாக உளறுகிறார் காசிமுத்துமாணிக்கம் குற்றச்சாட்டு
நடிகர் விஜய் தப்பு தப்பாக உளறுகிறார் காசிமுத்துமாணிக்கம் குற்றச்சாட்டு
ADDED : செப் 24, 2025 05:20 AM

சென்னை : 'நடிகர் விஜய், உள்ளூர் பிரச்னைகளை பேசுவதாக நினைத்துக் கொண்டு, தவறாக உளறுகிறார்' என, தி.மு.க., வர்த்தக அணி செயலர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., அமைச்சர்கள் பேசுகின்ற கூட்டத்திற்கு ஈடாக, விஜய்க்கு கூட்டம் இல்லை. அரசின் சார்பில், ஜெயலலிதா மீன் வள பல்கலை நடந்து கொண்டிருக்கும்போது, மீனவர்களுக்கான கல்லுாரி இல்லை என, விஜய் பேசி இருப்பது , சிறு பிள்ளைத்தனமான பேச்சு.
நெல் மூட்டைக்கு 20 ரூபாய் கூலி கூடுதலாக வாங்கினால், தமிழக அரசுக்கா போய் சேரும். திரைப்படத்தில் 100 ரூபாய் டிக்கெட், 1,000 ரூபாய்க்கு விற்றால், அதை விஜய் கணக்கில் சேர்த்து வருமான வரி போடலாமா?
செலவு செய்வதற்கு, மார்ட்டின் இருக்கிறார் என்பதாலேயே, என்ன வேண்டுமானாலும் பேசலாம் எனப் பேசி, உங்கள் தரத்தை கீழே இறக்கி கொள்ளாதீர்.
வன்மத்தை கக்கும் அரசியலை, அவதுாறு கூறும் அரசியலை நிறுத்திக் கொள்ளுங்கள். எப்போது தமிழிசை, 'நீங்கள் சிறப்பாக பேசுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பேசுங்கள்' என சொன்னபோதே, தாங்கள் காவிப்படை வரிசையில் சேர்ந்து விட்டது புரிகிறது.
அரசியல் இயக்கங்களில் இணைந்து, படிப்படியாக தன்னை வளர்த்துக் கொள்ளாமல், திடீரென அரசியலில் குதிக்கும் நடிகர்களை, தமிழகம் ஏற்றுக் கொண்டதே இல்லை.
தமிழக மண், அரசியல் தோட்டத்தில் வளராத எந்த நடிகரையும், திடீரென குதிக்கும் அரசியல்வாதியையும், அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்வது இல்லை. கடந்த தேர்தலில் போட்டியிட்ட நடிகர்கள் அனைவருக்கும், தோல்வியை தந்த மண்.
ஒரு காலத்தில், 'பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும்; கவர்னர் ரவி அப்பதவியில் தொடர வேண்டும்; அண்ணாமலை பா.ஜ., தமிழகத் தலைவராக நீடிக்க வேண்டும்' என, நாங்கள் ஆசைப்பட்டதுண்டு.
அதேபோல், இப்போது நீங்கள் இன்னும் பல வாரங்கள் பிரசாரத்துக்கு செல்ல ஆசைப்படுகிறோம். அப்போதுதான் உங்களுடைய காவி கலர் பளீச்சென்று தெரியும். எங்களுக்கு தேர்தல் வெற்றி எளிதாக கிடைக்கும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.