அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது அடுத்தடுத்து கிளம்பும் குற்றச்சாட்டுகள்
அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது அடுத்தடுத்து கிளம்பும் குற்றச்சாட்டுகள்
அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது அடுத்தடுத்து கிளம்பும் குற்றச்சாட்டுகள்
ADDED : ஜூலை 03, 2025 09:38 PM

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா என்ற பெண் மீது ஏற்கனவே பண மோசடி குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், தற்போது தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் திருமாறனும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கில் புகார் அளித்த நிகிதா, மதுரை மாவட்டம் திருமங்கலம், ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபெருமாள் என்பவரின் மகள். ஜெயபெருமாள் மறைந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. நிகிதா. இவர் 'முனைவர்' பட்டம் முடித்தவர். திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் பேராசிரியையாக உள்ளார்.
இவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மற்றொருவருடன் கூட்டு சேர்ந்து திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வசூலித்ததாகவும், அவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும் ரூ. பல லட்சம் மோசடி வழக்கு திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் 10.5.2011ல் பதிவானது. இதில், ஜெயபெருமாள், தாய் சிவகாமி, அண்ணன் கவியரசு, நிகிதா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தாயாருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் பேட்டி ஒன்றில் கூறியதாவது: நிகிதா என்ற பெண்ணை 21 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர்கள் செய்த திருமண மோசடியில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். அப்போது நான் சின்னஆள். செல்வாக்கு கிடையாது. திருமணம் செய்து தாலி கட்டி ஓடிவிட்டு, வரதட்சணை வழக்கு போட்டு, குடும்பத்தை அலைக்கழித்தனர். ரூ.10-20 லட்சம் பணம் வாங்கியுள்ளனர். 2004 ல் இது பெரிய பணம். மிரட்டி பணம் வாங்கி உள்ளனர். அனைவருக்கும் தெரியும். நான் தைரியமாக வெளிப்படையாக பேசக்கூடியவன். மற்றவர்கள் சொல்லவில்லை.
நிகிதா என தெரிந்து இருந்தால் அஜித்குமார் மீதான வழக்கு பொய் என முன்கூட்டியே சொல்லியிருப்பேன். அவர்கள் பணம், நகையை தொலைக்க வாய்ப்பு இல்லை. அஜித்குமாருக்கும், நிகிதாவுக்கும் வாக்குவாதம் வந்திருக்கும். அதற்கு பழிவாங்கியிருப்பார். நிகிதா குடும்பமே சீட்டிங் குடும்பம். பல்வேறு குடும்பங்களில் வேலைவாங்கி தருவதாக மிரட்டி உள்ளனர்.
அப்போதே என்னிடம் ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டு விவாகரத்து கொடுத்தனர். பெண் என்பதால், ஆராயாமல் வழக்கு போடுவதும், எழுதி கொடுப்பதை புகாராக எடுத்துக் கொண்டு அந்த கதையை நம்பி ககுடும்பங்களை சித்ரவதை செய்கின்றனர். அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட வலி இன்று அஜித்குமார் குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது. இவர் வாய்மொழியாக சொன்ன புகாரால் அஜித்குமார் இறந்துள்ளார். பெண்களுக்கு தரும் பாதுகாப்பை அடிக்கடி தறவாக பயன்படுத்தி பல்வேறு தவறுகளை செய்துள்ளார். கேட்டால், படித்து இருக்கிறேன் என்பார்.
தாலி கட்டி ஓடிவிடுவதுடன், வரதட்சணை புகார் கொடுப்பார். மேடையில் தொந்தரவு கொடுத்தனர். நகையை குறைவாக கொடுத்தனர் என கேட்டதாக புகார் தெரிவிப்பார். அவரின் புகாரை படித்து பார்த்தால் சிரிப்பு தான் வரும். இவர்களை வெளியே வர விடக்கூடாது. கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.
இவர்களுக்கு காவல்துறையில் செல்வாக்கு உள்ளது. அது வரும் வழி தான் தெரியவில்லை. நிகிதாவின் தந்தை சப்லெக்டராக இருந்தவர். தாயாரும் அரசுப்பணியில் இருந்துள்ளார். இந்த செல்வாக்கை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவது, ஏமாற்றி வந்தனர்.
2004ம் ஆண்டு அவருடன் எனக்கு திருமணம் நடந்தது. என் சார்பில் ஏராளமான வி.ஐ.பி.,க்கள் வந்தனர். அவர்கள் தரப்பில் 15 பேர் மட்டும் வந்தனர். திருமணம் முடிந்த அன்று இரவு பாலும் பழமும் சாப்பிட சென்ற இடத்திலிருந்து நிகிதா ஓடிவிட்டார்; அவரின் தந்தை பின்புற வழியாக ரூ.10 லட்சம் வாங்கிக்கொண்டு விவாகரத்து கொடுத்தனர். அன்று எனக்கு என்ன துன்புறுத்தல் இருந்ததோ, இன்னும் இருந்துள்ளது. எனது சகோதரர் வழக்கறிஞராக இருந்தும் எங்களால் சமாளிக்க முடியவில்லை. பல போலீஸ் அதிகாரிகளின் ஆதரவு அந்த குடும்பத்துக்கு உள்ளது. எப்படி என்று தெரியவில்லை. அவர்கள் நகையை தொலைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.