3 ஆண்டுகளில் விதிமீறிய 960 மருந்தக உரிமம் ரத்து
3 ஆண்டுகளில் விதிமீறிய 960 மருந்தக உரிமம் ரத்து
3 ஆண்டுகளில் விதிமீறிய 960 மருந்தக உரிமம் ரத்து
ADDED : ஜூன் 07, 2025 01:05 AM
சென்னை:தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் சட்ட விரோதமாக மருந்து விற்பனை செய்த, 960 மருந்தகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 40,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. நுாற்றுக்கணக்கான மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும், மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கண்காணித்து வருகிறது.
குறிப்பாக, டாக்டரின் பரிந்துரையின்றி, சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து சோதனை செய்யப்படுகிறது. மனநல மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகள், துாக்க மாத்திரைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள், டாக்டரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.
அதன்படி, மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மருந்தகங்களில் ஆய்வு நடத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், 960 கடைகள் மீது, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த, 2023 மே முதல் தற்போது வரை, விதிகளுக்கு புறம்பாக மருந்து விற்பனையில் ஈடுபட்ட, 960 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதை தவிர, டாக்டரின் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரை, துாக்க மாத்திரை விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட, 70 மருந்தகங்கள், நிறுவனங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.