சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 723 பேர் தேர்ச்சி
சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 723 பேர் தேர்ச்சி
சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 723 பேர் தேர்ச்சி

சென்னை:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்திய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த, 723 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வெழுத, நாடு முழுதும், 12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். கடந்த மே 25ல் நடந்த முதல்நிலை எழுத்து தேர்வில், 7 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், 11ம் தேதி இரவு வெளியாகின. இதில், 14,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, வரும் ஆக., 22ல் முதன்மை தேர்வுகள் நடக்கும்.
தேர்ச்சி பெற்ற, 14,156 தேர்வர்களில், 723 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் மேலாண் இயக்குநர் வைஷ்ணவி சங்கர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 'எங்கள் நிறுவனத்தின் சென்னை, டில்லி, திருவனந்தபுரம், பெங்களூரு பயிற்சி மையங்களில் படித்த, 963 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 723 பேரில், 450 பேர், எங்கள் பயிற்சி மையத்தில் படித்தவர்கள்' என, கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லுாரியிலும், நான் முதல்வன் திட்டத்திலும் படித்த மாணவர்கள், யு.பி.எஸ்.சி., முதல் நிலைத் தேர்வு முடிவுகளில், இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்.
முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில், முத்திரை பதிக்க வாழ்த்துகள். உங்கள் வெற்றி முகங்களை, நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.