மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 பவுன் தங்க நகைகள் கொள்ளை
மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 பவுன் தங்க நகைகள் கொள்ளை
மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 பவுன் தங்க நகைகள் கொள்ளை
ADDED : பிப் 10, 2024 08:23 PM

மயிலாடுதுறை:சீர்காழியில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரை சேர்ந்தவர் சின்னசாமி மகன் முனியசாமி என்கிற சேகர்.53. இவர் அரசு மருத்துவமனை சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சேகர் காலையில் கடைக்கு வந்து விட்ட நிலையில் அவரது மனைவி ரேணுகா வீட்டில் சமையலை முடித்துவிட்டு மதியம் 12:30 மணிக்கு கடைக்கு வந்துள்ளார். தொடர்ந்து சேகர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கேட் உடைக்கப்பட்டு, கதவு கள்ள சாவி கொண்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோல்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை எஸ்பி. மீனா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக தொடர் திருட்டுகள் அரங்கேறி வரும் நிலையில் இரவு ரோந்துகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி விடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இச்சம்பவம் நடந்தேறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.