ADDED : ஜன 12, 2024 11:31 PM
சென்னை:'பொங்கல் பண்டிகை பாதுகாப்பு பணியில், 50,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்' என, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையை ஒட்டி, கடை வீதிகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுதும், பாதுகாப்பு பணியில், 50,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுவர்.
சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து பல மாவட்டங்களுக்கு பொது மக்கள் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க, நெடுஞ்சாலைகளை ரோந்து வாகனங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் அதிகாரிகள் செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், காணும் பொங்கல் பண்டிகை, சுற்றுலா தலங்கள் மற்றும் நீர் நிலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதற்கு ஏற்ப போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதிவேகம், குடிபோதை மற்றும் அஜாக்கிரதையாக வாகனங்கள் ஓட்டுவோர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயலில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.