Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தாமிரபரணியில் 5 தடுப்பணைகள்; முன்னுரிமை அடிப்படையில் பணிகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

தாமிரபரணியில் 5 தடுப்பணைகள்; முன்னுரிமை அடிப்படையில் பணிகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

தாமிரபரணியில் 5 தடுப்பணைகள்; முன்னுரிமை அடிப்படையில் பணிகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

தாமிரபரணியில் 5 தடுப்பணைகள்; முன்னுரிமை அடிப்படையில் பணிகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

ADDED : மார் 19, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''தாமிரபரணி ஆற்றில், முன்னுரிமை அடிப்படையில், தடுப்பணைகள் கட்டப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - தாமோதரன்: கிணத்துக்கடவு தொகுதி, மதுக்கரை ஒன்றியம், திருமலையம்பாளையம் பேரூராட்சி, வழுக்கல் கிராமம் மற்றும் மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் பழுதடைந்தள்ளன; அவற்றை சீரமைக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: வழுக்கல் கிராம தடுப்பணைக்கு, 1.69 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. நிதி நிலைக்கேற்ப எடுத்து கொள்ளப்படும். மற்றொரு தடுப்பணைக்கு, 2 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. உங்கள் காட்டில் மழை பொழிகிறது.

தி.மு.க., - தியாகராஜன்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இருந்து மழைக் காலங்களில் வீணாகும் தண்ணீரை, வாய்க்கால் அமைத்து, முசிறி தொகுதிக்கு உட்பட்ட மகாதேவி ஏரிக்கு விட்டால் விவசாயிகள் பயனடைவர்.

அமைச்சர் துரைமுருகன்: நல்ல திட்டம்தான். முன்பே சொல்லி இருக்கலாம்.

பா.ம.க., - ஜி.மணி: பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் ஒன்றியத்தில், புளிக்கரை ஏரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இணைப்பு கால்வாயை இணைத்தால், விவசாயிகள் பயனடைவர்.

அமைச்சர் துரைமுருகன்: கோரிக்கை அக்கறையுடன் கவனிக்கப்படும்.

காங்., - ராஜேஷ்குமார்: கன்னியாகுமரி மாவட்டம், பி.பி.எம்., கால்வாய் துார் வாரப்படாமல் உள்ளது; அதை துார் வார வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளின் கரைகள் எல்லாம், கடந்த பெருமழையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஆற்றுக்கு கால்வாய் அமைத்தால் தான் நாஞ்சில் நாடு வளமாக இருக்க முடியும். தனி கவனம் செலுத்தப்படும்.

தி.மு.க., - பிச்சாண்டி: 'பெஞ்சல்' புயலின் போது, தென்பெண்ணையாறு வெள்ளப் பெருக்கெடுத்து, சேதத்தை ஏற்படுத்தியது. இதைத் தவிர்க்க, தடுப்பணை கட்டப்படுமா? உலக வங்கி நிதி பெற்று, 1,000 தடுப்பணைகள் கட்டப்படுமா?

அமைச்சர் துரைமுருகன்: சாத்தனுார் அணையின் வெள்ளத்தின் போது விபரீதம் ஏற்பட்டது. இதுபோல் மீண்டும் வெள்ளம் வந்தால் சமாளிக்க, தனி திட்டம் தயார் செய்துள்ளோம். அதன் அடிப்படையில், உறுப்பினர் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: தாமிரபரணி வற்றாத ஜீவநதி. மழைக் காலத்தில் அதிக நீர் வந்து, கடலுக்கு செல்கிறது. ஆற்றில் குறைந்தது ஐந்து தடுப்பணைகள் கட்ட வேண்டும். சிற்றாறில், கங்கைகொண்டான் பகுதியில், ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: நியாயமான கோரிக்கை. நம்மிடம் உள்ள ஒரே வற்றாத நதி அது ஒன்றுதான். ஒரு காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுகள், தண்ணீரை நிறுத்தின. அதை தாண்டி பெருமழை வரும் போது சீரழிவு ஏற்படுகிறது.

முன்னுரிமை கொடுத்து செய்யப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பணை கேட்கின்றனர். ஒரு உறுப்பினருக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டலாம். அமைச்சர் தங்கம் தென்னரசு அனுமதித்தால், இந்த ஆண்டே செய்கிறேன். இதுகுறித்து, முதல்வருடன் பேச உள்ளேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us