'ஆன்டிபயாடிக்' ஊசி போட்ட 27 பெண்கள் மயக்கம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
'ஆன்டிபயாடிக்' ஊசி போட்ட 27 பெண்கள் மயக்கம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
'ஆன்டிபயாடிக்' ஊசி போட்ட 27 பெண்கள் மயக்கம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
ADDED : செப் 19, 2025 03:37 AM

சென்னை:''சீர்காழி அரசு மருத்துவமனையில், ஊசி வாயிலாக நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து செலுத்தி கொண்ட கர்ப்பிணியர் மயக்கமடைந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழி அரசு மருத்துவ மனை வளாகத்தில், அரசின் தாய் சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, 27 கர்ப்பிணியர், 20 பிரசவித்த தாய்மார்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, நேற்று முன்தினம் இரவு நோய் எதிர்ப்பு சக்திக்காக, 'செப்போடேக்சிம்' என்ற மருந்து, ஊசி மூலம் செலுத்தப்பட்டு உள்ளது.
ஊசி போடப்பட்ட சிறிது நேரத்தில், ஒன்பது கர்ப் பிணியர், 18 பிரசவித்த தாய்மார்கள் என, 27 பேருக்கு நடுக்கத்துடன் காய்ச்சல், மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் மாற்று மருந்து செலுத்தினர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களில், 26 பேர் குணமடைந்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து காய்ச்சல் இருந்த, எருக்கூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் மேல் சிகிச்சைக்காக, சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
சீர்காழி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியர் அனைவரும் நலமுடன் உள்ளனர். குறிப்பிட்ட அம்மருந்தில் தான் பிரச்னை என, தெரியவந்துள்ளது. அதேநேரம், மற்ற இடங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
எனவே, சீர்காழி மருத்துவமனையின் மருந்து சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
இதற்கான முடிவுகள் வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அம்மருந்துகளை செலுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. மற்ற இடங்களிலும், கண்காணிக்கப்பட்டு, உரிய முறையில் மருந்துகள் செலுத்துவது உறுதிப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.